June 23, 2026
IMG_20250102_185135
Share

         தை 1ம் தேதி பொங்கல் விழா வரும் 14ம் தேதி அன்று கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக தற்போதிலிருந்தே புத்தாடைகள் வாங்குவது உள்ளிட்ட விஷயங்களில் மக்கள் ஆர்வமாக கடைகளில் குவிந்து வருகின்றனர்.

பொங்கலுக்காக தமிழ்நாடு அரசு வழக்கமாக நியாய விலைக் கடைகளில், பொங்கல் தொகுப்பு வழங்கும். அதனுடன் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட 1000 ரூபாயும் வழங்கும்.

இந்த முறை ‘ஃபெஞ்ச்’ புயல் நிவாரணம், மகளிர் உரிமைத் தொகை வழங்குதல் உள்ளிட்ட காரணங்களாலும், நிதி பற்றாக்குறை காரணமாகவும் பொங்கல் தொகுப்பில் 1000 ரூபாய் வழங்கவில்லை.

இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், அரசு ஊழியர்களுக்கு, ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொங்கல் போனஸிற்காக ரூ. 163 கோடியே 81 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ. 3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு போனஸ் ஊதியம் வழங்கப்படுகிறது.

தொகுப்பூதியம், சிறப்புக் கால ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2023 – 2024ம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூ. 1000 சிறப்பு போனஸ் வழங்கப்படும்.

சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூ. 500 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *