இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஐந்தாவது, கடைசி டெஸ்ட் இன்று சிட்னியில் துவங்கியது. ரோகித் சர்மாவுக்குப் பதில் கேப்டனாக களமிறங்கய பும்ரா, டாஸில் வென்று, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி ஐந்து போட்டி கொண்ட ‘பார்டர்–கவாஸ்கர்’ டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் மட்டும் இந்தியா வென்றது. அடிலெய்டு, மெல்போர்னில் தோற்க (பிரிஸ்பேன் டெஸ்ட் ‘டிரா’) தொடரில் 1–2 என பின்தங்கியுள்ளது. ஐந்தாவது, கடைசி டெஸ்ட் இன்று சிட்னியில் துவங்கியது.
ரோகித் ‘அவுட்’
மோசமான பார்ம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா, அணியில் இருந்து நீக்கப்பட்டார். கடைசி 15 இன்னிங்சில் 10ல் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டானார். இத்தொடரில் 3, 6, 10, 3, 9 என மொத்தம் 31 ரன் தான் (சராசரி 6.2) எடுத்தார்.
ரோகித்துக்குப் பதில் பெர்த் டெஸ்டில் வெற்றி பெற்றுத் தந்த பும்ரா, மீண்டும் தலைமை ஏற்றார். சுப்மன் கில்லுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. ஆகாஷ் தீப் முதுகுப்பிரச்னை காரணமாக சிட்னி டெஸ்டில் பங்கேற்கவில்லை. இவரது இடத்தில் இன்று பிரசித் கிருஷ்ணா களமிறங்க உள்ளார். சுழலில் ஜடேஜா, வாஷிங்டன் கூட்டணி இடம் பெற்றுள்ளனர்.
