அரசியல் பெரிய கடல். அதில் முத்தெடுத்து, மக்களுக்குச்சேர்க்க, தனிப்பட்ட நபரால் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்ய தேவை – எண்ணம், சிந்தனை, செயல், பணம் வேண்டும்
என்னிடம் எண்ணமும் சிந்தனையும் மட்டுமே உள்ளது என்பதை புரிந்துகொண்டேன்.
ஹிந்தியில் உள்ள ‘காம்சோர்’ என்னும் வார்த்தை. ஆங்கிலத்தில் Slacker. அதாவது கடமைகளைத்தட்டிக்கழிக்கும் சோம்பேறி. மய்யத்தில் நான் செய்தது காம்சோர். இதை ஒத்துக்கொள்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.
அமெரிக்க அரசியலில் ஒரு term பயன்பாட்டில் உள்ளது. Career Politician. முழுமையாக அரசியலில் மட்டுமே இருப்பவர்கள், அரசியலையே தொழிலாகக்கொண்டவர்கள், அதிலிருந்தே சம்பாதிப்பவர்கள். ஆனால் அதை முறியடித்துத்தான் அத்தனை career politicianகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு Trump அதிபரானார். (அவர் அமெரிக்காவிற்கு சரியான தலைவரா இல்லையா என்பது வேறு விஷயம்). ஆனால் அங்குள்ள மக்களே உணர்ந்தது என்னவென்றால் – career politicianகளைவிட businessmanஆன Trump எல்லாவிதத்திலும் மக்களின் நலனுக்காக மக்கள் கஷ்டங்கள் தெரிந்து போராடுவார், இதைத்தான் அமெரிக்காவின் founding fathersஉம் விரும்பினர் என்று. ஆனால், அப்படி முழுநேர அரசியல் செய்யாமல் அவ்வரசியலிலிருந்து பொருள் ஈட்டாமல் இருக்க, மக்கள் பணத்தைச் சுருட்டாமல் இருக்க, சொந்தமாகப் பெரிய வணிக அல்லது பொருளாதாரப் பின்புலம் தேவை. அது என்னிடம் இல்லை.
நம்மவர் போன்ற மகத்தான தலைவனைத் தவறவிட்டது தமிழ்நாடு மட்டுமல்ல, வினோதினியும்தான். தொடர்ந்து என் எண்ணமும் சிந்தனையும் தமிழ்நாட்டு அரசியலை மையப்படுத்தியே இருக்கும்.
65 வயதிற்கு மேலும் தனது மூத்திரப்பையை கையில் ஏந்தி பகுத்தறிவு புகட்டிய அந்த தாத்தனைப்போல், இன்றும் எங்கள் மய்யத்தில் கொடி நட்டு, போஸ்டரடித்து, உறுப்பினர் சேர்த்து, ஒவ்வொரு தேர்தலின்போதும் அயராது களத்தில் இறங்கி வேலைசெய்யும் தொண்டனைப்போல், மக்கள் பிரச்சனை என்றால் களத்தில் குதிக்கும் ஒவ்வொரு கட்சியின் நிர்வாகிபோல் நானும் என் கணக்கைத் தொடங்கும் பொழுதுதான் அது அரசியல் அல்லாது, அறச் செயலாக மாறும்.
