April 30, 2026
PR Pandian press meet
Share

குடியரசு தினம் ஜனவரி 26-ம் தேதி ஜக்ஜித்சிங் டல்லே வாலுக்கு ஆதரவாக டிராக்டர் பேரணி தமிழ்நாடு முழுமையிலும் நடைபெறும் என்று பி.ஆர். பாண்டியன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளருமான பிஆர். பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது:

அரசியல் சார்பற்ற சம்யுக்த கிசான் மோர்சா அமைப்பின் சார்பில் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி 2024 இல் சண்டிகரில் துவங்கி டெல்லி நோக்கி நீதி கேட்டு விவசாயிகள் பேரணி துவங்கினர். ஹரியானா மாநில எல்லையான ஷம்பு பார்டரிலும் கணூரி பார்டரிலும் தடுத்து நிறுத்தப்பட்டு சுமார் 11 மாதங்களாக கடும் பனிப்பொழிவிலும் மழையிலும் கொடுமையான வெயிலிலும் விவசாயிகள் முகாமிட்டு போராடி வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் பஞ்சாப் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் நவாப் சிங் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு குழு விவசாயிகளின் கருத்தை கேட்டு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் உடனடியாக கொண்டுவரப்பட வேண்டும். விவசாயிகள் பெற்ற கடன் முழுமையும் தள்ளுபடி செய்யப்பட்டு தற்கொலையிலிருந்து பாதுகாக்க வேண்டும்.உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உச்சநீதிமன்றத்திற்கு கடந்த நவம்பர் 22ஆம் தேதி முன்மொழிவாக கொடுத்துள்ளது.

இதனை நிறைவேற்ற வலியுறுத்தி நவம்பர் 26 முதல் சம்யுக்த்த கிசான் மோர்சா அமைப்பினுடைய தலைவர் ஜக்ஜித்சிங் டல்லேவால் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கணூரி பார்டரில் மேற்கொண்டு வருகிறார்.இன்றோடு 46 நாட்கள் நிறைவு பெறுகிறது.

அவரது உடல்நிலை மோசமாகி வருகிறது.இதனை அறிந்த பஞ்சாப் விவசாயிகள் ரஞ்சித் சிங், ரேஷன் சிங் ஆகிய இருவரும் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர். உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழு நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி உண்ணாவிரத்தை கைவிட கேட்டுக் கொண்டனர்.ஆனால் டல்லேவாலோ என் உயிரை விட விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வருவதுதான் எனக்கு முதன்மையானது. எனவே என் உயிர் போனாலும் பரவாயில்லை மத்திய அரசு அதற்கான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று உறுதிப்படுத்த தெரிவித்து விட்டார்.

உச்சநீதிமன்றம் உத்தரவை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக உள்ளதாக வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சவுகான் அறிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரரை எதிர்பார்த்து மத்திய அரசு காத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. விவசாயிகளின் கோரிக்கையை உச்சநீதிமன்ற குழுவும் முன்மொழிந்து உள்ளது.

மத்திய அரசு விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக எம்.எஸ்.பி கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும் டல்லவால் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வருகிற குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி அன்று இந்தியா முழுமையிலும் டிராக்டர் பேரணி நடத்த அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

அதனை ஏற்று தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் டிராக்டர் பேரணி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் வகையில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

வரும் 13ஆம் தேதி பொங்கல் திருநாளை முன்னிட்டு பிரதமர் உருவ பொம்மை எரிக்கும் போராட்டம் பொங்கள் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டிற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மலையடிவார மாவட்டங்களில் காட்டுப் பன்றி தொல்லை அதிகரித்து வந்த நிலையில்,தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களிலும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை உருவாக்கி வருகிறது.எனவே காட்டுப்பன்றிகளை பிடித்து சிறப்பு முகாம்களை காட்டுப்பகுதியில் உருவாக்கி அவற்றை பாதுகாக்க வேண்டும். இல்லாவிட்டால் கேரளாவை பின் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொள்வதற்கான அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இல்லையேல் காவிரி டெல்டா ஒட்டுமொத்தமாக பயிர்கள் அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது” என்று பி.ஆர். பாண்டியன் கூறினார்.

திருவாரூர் மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன், கோட்டூர் தெற்கு ஒன்றிய தலைவர் ஜெ.ராஜகோபால், குடவாசல் ஒன்றிய செயலாளர் நாகராஜ், உயர் மட்டக்குழு உறுப்பினர் செல்வராஜ், கொரடாச்சேரி பிரபாகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *