April 29, 2026
jdp seeman
Share

“வரலாறு தந்த மாபெரும் வாய்ப்பை தவற விட்டு விட்டீர்கள் அண்ணா. ஒருகாலும் இந்த மண்ணில் அரசியல் மாற்றத்தை வலதுசாரி சிந்தனையோடு உங்களால் கொண்டு வர முடியவே முடியாது.” என்று கூறி நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக ஜெகதீச பாண்டியன் சீமானுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ஜெகதீச பாண்டியன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “அண்ணன் சீமான் அவர்களுக்கு வணக்கம்,

அண்ணா இதுபோல் ஒரு கடிதம் எழுதுவேன் என்று நான் கனவிலும் நினைத்தது இல்லை. காலம் பொல்லாதது, என்னை இந்த நிலைமைக்கு தள்ளியது நீங்கள் தான்.

“உட்கட்சி விமர்சனம் என்பது கட்சி ஸ்தாபனத்தை வலிமைப்படுத்தி அதன் போராட்ட ஆற்றலை பெருக்கும் ஓர் ஆயுதம் ஆகும்” என்கிறார் தோழர் மாவோ.

சமீப காலமாக நீங்கள் நேர்காணல்களிலும் மேடைப் பேச்சுகளிலும் கட்சியை இதற்காக ஆரம்பித்தோமோ அதனிலிருந்து விலகி இந்த தமிழ் சமூகம் யாரால் இத்தனை நூற்றாண்டுகளாக அடிமைப்பட காரணமாக இருந்ததோ அவர்களுக்கும் அவர்கள் கருத்தியலுக்கும் வலு சேர்ப்பதாக இருக்கிறது.

இக்கருத்தை நான் பலமுறை உங்களோடு சுட்டிக்காட்டியும் இருக்கிறேன் நவம்பர் 27 மாவீரர் நாளுக்கு பிறகு நீங்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் முரணாக இருக்கின்றன என்ற தகவல் கூற அழைத்தபோது என் அழைப்பை ஏற்கவில்லை.
“எதிரிக்கு எதிரான நமது போராட்டத்தில் நம் கையில் உள்ள ஒரே ஆயுதம் நமது அமைப்பே ஆகும்” என தோழர் லெனின் கூறியுள்ளார்.

கட்சி ஆரம்பித்து 15 ஆண்டுகள் ஆகியும் நீங்கள் அமைப்பை கட்ட கவனம் செலுத்தவில்லை, கட்டமைப்பு குழுவையும் அவர்கள் கட்டிய அமைப்பையும் கடந்த 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கட்டமைப்பு குழுவின் கருத்தை கேட்காமலேயே கலைத்து விட்டீர்கள். யார் ஒருவரும் இதன் பொருட்டு ஆளுமையாக அடையாளப்பட்டு விடக்கூடாது என்று நினைத்து செயல்படுகிறீர்களோ என்று ஐயம் ஏற்பட்டது.
அமைப்பைப் பற்றியும் அமைப்பு விதியைப் பற்றியும் நாங்கள் பேசினால் அதீத கோபம் அடைகிறீர்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உங்களிடம் எழுதிக் கொடுத்த அமைப்பு விதியை நீங்கள் இன்னும்கூட பார்க்கவில்லை என்பதை பலமுறை சுட்டிக்காட்டியும் பயனில்லை.

எவ்வளவு உயர்ந்த தத்துவமாக இருந்தாலும் அந்த தத்துவத்தை நிறைவேற்ற ஒரு அமைப்பு வேண்டும், அமைப்பு சரியாக இயங்க விதிகள் வேண்டும் அதைவிட மிக முக்கியம் மிகச்சிறந்த ஒழுக்கமுள்ள தலைவன் இல்லாவிட்டால் அனைத்தும் கேலிக்கூத்து தான் என்பதை வரலாறு நமக்கு பலமுறை வலியுறுத்தி வந்துள்ளது.

நாம் தமிழர் கட்சி எந்த ஒரு தனி மனிதனாலும் ஆரம்பிக்கப்பட்டு வளர்ந்த கட்சி அல்ல, கடந்த 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் நடந்த படுகொலையைக் கண்டு பொறுக்க முடியாமல் மனம் விரும்பி நமக்கான மூச்சுக்காற்றை நாமே சுவாசிப்பது போல நமக்கான விடுதலையை வென்றெடுக்க 40,000 மாவீரர்களின் மூச்சுக்காற்றாலும் இரண்டரை லட்சம் தமிழ் இனத்தின் பிணத்தின் மீதும், பாதையை தேடாதே உருவாக்கு என்று நமக்கு கற்றுக் கொடுத்த உலகின் ஒப்பற்ற பெருவீரன் நமது தேசியத் தலைவரின் தத்துவத்தை ஏற்றுக் கொண்டு பல தமிழ் உறவுகள் தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது, அய்யா மணிவண்ணன், சுபா. முத்துக்குமார், வழக்கறிஞர் மைக்கேல், நெல்லை சிவா, வெற்றி குமரன், ராஜீவ் காந்தி, காமராஜ் (நாம் தமிழர் கட்சி) பெயரை கூறியவர். வழக்கறிஞர் விஜயராகவன், வழக்கறிஞர் ஆனந்தராஜ், அலாவுதீன், பாதர் ஜெகத் கஸ்பர், கார்வண்ணன் நான் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இவர்கள் ஒன்றுகூடி பலமுறை விவாதித்து இந்த அமைப்பை தொடங்கினோம் அதன்படி பல ஆயிரக்கணக்கான மார்க்சிய பெரியாரிய அம்பேத்கரிய முற்போக்காளர்களாக இருக்கக்கூடிய அனைத்து உள்நாட்டு வெளிநாட்டு தமிழ் உறவுகளின் தியாகத்தாலும் பொருளாதார உதவியாளும் கட்டி அமைக்கப்பட்ட இந்த இயக்கம் உங்கள் பேச்சாலும் வளர்ந்தது.

கட்சி வளர வளர உங்கள் நம்பிக்கை அதிகமாகி, அது அதிகாரமாக மாற உங்களிடம் இருந்து எளிமையும் உறவோடு பேசும் இனிமையும் காணாமல் போய்விட்டது.

வேகமாக மாறும் உலகில் கசியும் இரகசிய தகவல்களால் ஏற்படும் பாதிப்புகளை விட பகிரப்பட்ட உண்மையான தகவல்களால் ஏற்படும் நன்மை அதிகம் என்று வரலாறு நமக்கு நிரூபித்து இருக்கிறது. இதை உணராமல் உங்களுடனும் உங்கள் பின்னாலும் மக்களிடம் அறிமுகமானவர்கள் புகழ்பெற்றவர்கள் கட்சிக்கு வந்து தனது உழைப்பாலும் கட்சிக்கொடுத்த வாய்ப்பாலும் உயர்ந்தவர்கள் சிலரை நா வன்மையாலும் சிலரை அவமானப்படுத்தப்பட்டு அவர்களாகவே வெளியேறும்படியும் செய்தீர்கள்.

இதையெல்லாம் நான் பலமுறை உங்களிடம் சுட்டிக்காட்டி உள்ளேன். கட்சியில் அதற்கு நீங்கள் கொடுத்த பதில், “தம்பீ.. பேருந்தில் 50 பேர் உட்கார்ந்திருப்பார்கள் ஒருவர்தான் ஓட்ட முடியும் என்பீர்கள்” ஆனால் உங்களோடு அந்த பேருந்தில் ஏறியவர்கள் எல்லாம் அறிவார்ந்த ஓட்டுநர்கள் அண்ணா அப்படியே நீங்கள் ஓட்டுநராக இருந்தாலும் அதன் உரிமையாளர் போல் நடந்து கொண்டுள்ளீர்கள் அண்ணா.

அப்பேருந்து (கட்சி) பல பேரின் தியாகத்தாலும் ரத்தத்தாலும் வியர்வையாலும் உருவாகிய பேருந்து என்பதை நீங்கள் அடிக்கடி மறந்து விடுகிறீர்கள் அண்ணா.

ஒன்றிய அரசுக்கு நாம் கூடி ஆள்வோம் என்று பல மேடைகளில் அறிவுரை சொல்லும் நீங்கள், கட்சியில் கூடி பேசி முடிவெடுத்து செயல்படுத்த மறந்து போகிறீர்கள் அல்லது மறுத்துவிடுகிறீர்கள் அண்ணா, இதை சுட்டிக்காட்டினால் அன்பான சர்வாதிகாரம் என்கிறீர்கள் அண்ணா.

அன்பு ஜனநாயகத்தைத் தான் கொண்டு வருமே ஒழிய ஒரு காலும் சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்லாது என்பதை உலக பேரறிஞர்களின் பொன் மொழிகளை மேடையில் உறக்க உச்சரிக்கும் உங்களுக்கு எப்படி தெரியாமல் போய்விடுகிறது அண்ணா.

எதிரிகள் தலைவர் பிரபாகரனை சர்வாதிகாரி என்று சொல்கிறார்கள் அண்ணா, ஆனால், நான் தமிழீழக் கொள்கையை கைவிட்டு விட்டால் ஆயுதத்துடன் அருகில் இருக்கும் புலிகள் தன்னை சுட்டு கொன்று விடுங்கள் என்று அதிகாரம் அளித்த ஆகச்சிறந்த ஜனநாயகவாதியின் உருவத்தை குறியீடாக வைத்து அரசியல் நிறுத்துகிற நீங்கள், சர்வாதிகாரியாகவே நடந்து கொள்கிறீர்கள் அண்ணா.

அனைத்திலும் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று மேடைக்கு மேடை பேசும் நீங்கள் பொதுக்குழுவைக் கூட்டி யாருக்கும் அறிவிக்காமலேயே வெளிநாட்டு குடியுரிமை பெற்ற ஆர்.எஸ்.எஸ்-ஸின் தாக்கம் உள்ள ஒருவரை பொதுச் செயலாளராக நியமித்து இருக்கிறீர்களே எப்படி அண்ணா?

நிர்வாகத்தில் சிறப்பாக பணிபுரிந்த பொருளாளரை பொறுப்பில் இருந்து எந்த காரணமும் சொல்லாமல் நீக்கிவிட்டு, 8 ஆண்டுகளாக கட்சிக்கே வராத கட்சிக்கு எதிராக செயல்பட்ட நாம் தமிழர் கட்சியை கைப்பற்ற முயற்சி செய்த, பல மேடைகளில் உங்களை திட்டி தீர்த்த ஒருவரை பொருளாளராக நியமித்திருக்கிறீர்களே அண்ணா? தவறான நபர்களை பொறுப்பிற்கு தேர்வு செய்து சரியான செயலை எப்படி அண்ணா செய்ய முடியும்?

கட்சியில் விதியில்லை விதியில்லாததால் கட்சியினருக்கு நீதி இல்லை. நீதியையும் சரிவர கையாளாததால் இன்று தமிழ்நாட்டில் காசு கொடுத்து கூட்டத்திற்கும் பொதுக்கூட்டத்திற்கும் அழைத்து வந்து வாக்குகளை காசு கொடுத்து வாங்கும் நிலையில், தன் குடும்பத் தேவைகளை குறைத்துக் கொண்டு, சொந்த காசை போட்டு கொடிநட்டு, கூட்டம் நடத்தி, தேர்தல் செலவுகளுக்கு பிழைக்கப் போன இடத்தில் தன் இனம் தழைக்க ஒரு வேளை உணவை தவிர்த்து உணர்வோடும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ்கிற நமது தாய் தமிழ் உறவுகள் அனுப்புகிற பணம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருப்பவர்களால் ஊதாரித்தனமாக செலவு செய்யப்படுகிறது. இது எந்த அளவுக்கு போயிருக்கிறது என்றால் கட்சியில் இருப்பவர்கள் தனது பொருளாதாரத்தை இழந்து வசிப்பிடத்திலிருந்து வாடகை வீட்டில் குடியிருக்கும் நிலையில், சம்பளத்திற்கு வேலை செய்யும் தலைமை நிலையத்தில் இருப்பவர்கள் கட்சி பணத்தை எடுத்து வட்டிக்கு விடுவதும் புதிய வாகனத்தை வாங்குவதும் வீட்டை வாங்குவதும் ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சங்களை இழப்பதும் வாடிக்கையாய் போனது அண்ணா.

அலுவலகம் வாங்க வெளிநாடு வாழ் தமிழர்கள் அனுப்பிய பணத்தை தலைமையில் இருப்பவர்களின் கவனக்குறைவால் விரையமாக்கி, சோறு தண்ணி இல்லாமல் சோர்வடையாமல் தமிழ்நாட்டு உறவுகளும் வெளிநாடுகளில் வாழ்கிற தமிழ் உறவுகளும் விமான பயணத்திற்கு பல லட்சம் செலவு செய்து இனத்துக்கான வாக்கை தன்மானத்தோடு பதிவு செய்து பெறப்பட்ட 30 லட்சம் வாக்குகளை பெற்ற கரும்பு விவசாயி சின்னத்தை சிறப்பாக நிர்வாகம் செய்து வந்த இராவணன் அண்ணனை புறக்கணித்துவிட்டு நிர்வாக திறனற்றவர்களின் கையாலாகாத தனத்தால் விவசாயி சின்னம் பறிபோனது.

என் மீது உள்ள நம்பிக்கையாலும் என் செயல் திறனை நீங்கள் அறிந்திருந்ததாலும் 2024 பாராளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் என்னை வேட்பாளராக அறிவித்தீர்கள்.

அறிவித்த நாள் முதல் ஐயா இயக்நனர் இமயம் பாரதிராஜா அவர்களை எனது தொகுதிக்கு அழைத்துச் சென்று முதன் முதல் பிரச்சாரத்தை துவக்கி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீச பாண்டியன் வென்றுவிடுவார் என்று தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பில் இடம்பெறும் அளவிற்கு தொகுதி உறவுகளின் ஒத்துழைப்போடு பணியாற்றினேன்.

நீங்கள் எனக்கு பிரச்சாரத்திற்கு வரும்போது தமிழகத்திலேயே மிகச் சிறப்பான ஒரு கூட்டத்தை நடத்திக் காட்டினோம். அந்தக் கூட்டத்தில் பேசிய நீங்கள் என்னுடன் கட்சியை ஆரம்பிக்கும் போது வர பயந்தவர்களுக்கு மத்தியில் எதற்கும் அஞ்சாது 25 ஆண்டுகளாக என்னை தோளில் தூக்கி சுமந்தவன் என்றும் என் குடும்பமே ஒத்துழைக்க மறுத்த போதும் ஈழப் பயணம் ஏற்பாடுகளை உறுதி செய்து பெங்களூருவில் இருந்து விமானம் ஏற்றியும் திரும்பி வரும்போது என்னை அழைத்து வந்தவன் என்று என்னை பெருமையாக பேசி சிலாகித்துக் கொண்டீர்கள் அது தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஐந்து இடங்களில் மூன்றாவது இடம் வந்தது அதில் கள்ளக்குறிச்சி தொகுதியும் ஒன்று.

சென்ற ஆண்டு நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆரம்ப வேளையில் இருந்து வாக்கு என்னும் வரை நான் சிறப்பாக பணிபுரிந்ததாக நீங்கள் மற்றவர்களிடம் சொன்னதாக கேள்விப்பட்டேன்.

நான் மேற்கூறிய அனைத்தும் நிர்வாக சிக்கல்தானே அதை சரி செய்து கொள்வோம் சரி செய்து கொள்வோம் என்று காத்திருந்த வேளையில் இப்போது கொள்கையிலேயே முரண்பட்டு நிற்கிறீர்கள்.

திரு ரவீந்திரன் துரைசாமியின் தவறான வழிகாட்டுதலால் தாங்கள் திரு ரஜினி அவர்களை சந்தித்தீர்கள் சந்தித்ததில் தவறு இல்லை சந்தித்த பிறகு நீங்கள் கொடுத்த நேர்காணல் இருக்கின்றதே சில நாட்களுக்கு முன்னர் சங்கி என்றால் செருப்பால் அடிப்பேன் என்று சொன்ன நீங்கள் சங்கி என்றால் சக தோழன் என்று சொன்னதைக் கேட்டு நானும் கட்சியில் உள்ள பெரும்பான்மையோரும் தமிழ்நாட்டில் உள்ள பல முற்போக்கு சக்திகளும் அதிர்ச்சி அடைந்தும் அண்ணா.

மண்ணில் மாற்றத்தை ஏற்படுத்த இரத்தம் சிந்தி செயல்பட்ட மார்க்சியே பெரியாருடைய அம்பேத்கர் தமிழ் தேசியர்களை கொன்று ஒழிக்கும் பாசிச மனோநிலை கொண்ட சங்கிகளை தோழர் என்று அழைக்க எப்படி அண்ணா மனம் வந்தது என்று கேட்க உங்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன் வழக்கம் போல் பதில் இல்லை. எனது கருத்தை தெரிவிக்க முகநூலிலும் எக்ஸ் தளத்திலும்

“சங்கி தமிழுக்கு எதிரி
சங்கி தமிழனுக்கு எதிரி
சங்கி தமிழ் நாட்டுக்கு எதிரி
சங்கி மானிட குல எதிரி” என்று பதிவிட்டேன்.

கட்சி ஆரம்பித்து கட்சிக்காக உழைத்த பல மூத்த உறுப்பினர்கள் உங்கள் அருகில் இருக்கும் செயல்படாத நபர்களை விமர்சிப்பதை உங்களிடம் உங்களை விமர்சிப்பதாக சிலர் தவறாக சொல்வதால் நீங்கள் அவர்களை கொள்கை முரண்பட்டவர்கள் என நினைத்து அவர்களுடைய தியாகத்தை பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் அண்ணன் தம்பியாக இருந்தாலும் எனக்கு எதிரி எதிரி தான் என்றீர்கள்.

பல நூற்றாண்டுகளாக ஆண்டுகளாக தமிழையும் தமிழ் மொழியையும் இனத்தையும் அடிமையாக்கி வஞ்சித்து வருகின்ற வலதுசாரி கருத்துக் கொண்டவர்களை ஐயா, அம்மா, மாமா என்கிறீர்கள்.

யார் சொல்லி இருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உன் புத்திக்கும் பொது அறிவுக்கு எட்டாத எதையும் நம்பாதே என்று சொன்ன பெரியாரின் கருத்தை பல மேடைகளில் நீங்கள் பேசி இருந்தாலும் அவர் எழுதாத கருத்தை எழுதியதாக நீங்கள் கொடுத்த நேர்காணலுக்கு கட்சிக்குள் இருப்பவர்களும் தமிழகத்தில் உள்ள முற்போக்கு சக்திகளும் எதிர் மனநிலையில் இருந்தாலும் நமக்கு நேர் எதிர் சித்தாந்தங்களை கொண்ட பாண்டே, ஹெச். ராஜா, ஆடிட்டர் குருமூர்த்தி, அண்ணாமலை மற்றும் அம்மா தமிழிசை உங்களை தீம் பாட்னர் என்று கூறி வலிய வந்து உங்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது கலக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்த கருத்துக்கெல்லாம் அண்ணன் மறுப்பு தெரிவிப்பார் என்று எதிர்பார்த்து இருந்தேன் மறுப்பு வராததால் பெரியாரைப் பற்றி சொன்ன கருத்துக்கள் அண்ணன் சீமானின் கருத்து தானே ஒழிய எண்ணெய் போன்றவர்களின் கருத்து அல்ல என்று ஜனநாயக பூர்வமாக எனது கருத்தை தெரிவித்து இருந்தேன்.

தமிழ்நாட்டில் உள்ள முதலாளித்துவ கட்சிகளில் கூட கட்சிக்குள் சிறிது ஜனநாயகம் இருக்கிறது. அவர் சிறந்த ஜனநாயகத்தை கட்டி எழுப்புவோம் என்ற முழக்கத்தோடு ஆரம்பித்த நமது கட்சிக்குள் எந்த ஜனநாயகமும் இல்லை.

என் கருத்தியலுக்கு எதிராக பேசுவதாக நினைத்துக் கொண்டு எந்த தமிழுக்காக வாழ்நாள் முழுக்க அரசியல் செய்ய வேண்டும் என்று உங்களோடு வந்த என்னை அவதூறு பரப்புகின்றனர்,

வலது சாரி ஆதரவு கருத்துக்கு அண்ணன் மறுப்பு தெரிவிப்பார் என்று எதிர்பார்த்து இருந்த நேரத்தில் கோவை விமான நிலையத்தில் பிரசாந்த் கிஷோரை விட தம்பி பாண்டே அறிவு மிக்கவன் என்றும் கொஞ்ச நாளைக்கு முன்பு பைத்தியம் என்று சொன்னவரை தமிழ் பேரறிஞர் ஹரஹர ராஜ சர்மா என்றும் நீங்கள் முழு சங்கீகள் பேசுவது போல பேசுவது பெருத்த அச்சத்தை ஏற்படுத்துகிறது அண்ணா.

அண்ணன் இப்படி எல்லாம் பேசுகிறாரே என்று வேதனையோடு இருந்தபோது அடிக்கடி நீங்கள் குருமூர்த்தியையும் தினமலர் கோபால்ஜியையும் சந்தித்து அவர்களது வழிகாட்டுதலின் பேரில் தமிழர்களின் நாடி நரம்புகளில் உரமேறி இருக்கும் நமது தேசிய தலைவரையும் தமிழீழ விடுதலைக்கு பெரும்பங்காற்றிய திராவிட இயக்க தோழர்களின் குறியீடாக இருக்கக்கூடிய பெரியாரையும் எதிர் எதிராக நிறுத்துவது தமிழ்நாட்டில் தமிழர் அரசியல் வளர்ச்சி பெறாமல் இருக்க சங்பரிவார் கும்பலின் சதித்திட்டம் என்பது தெரிகிறது அண்ணா.

தமிழரின் அறிவாகவும் ஆற்றலாகவும் உணர்வாகவும் இருக்கக்கூடிய தலைவர் மேதகு வே. பிரபாகரனின் குடும்பத்தில் உள்ள கார்த்திக் மனோகரனை சிங்களவனே பயன்படுத்த தயங்கக்கூடிய வார்த்தையை பயன்படுத்தி வசைப்பாடினீர்கள் அண்ணா.

மாவீரர் குடும்பத்திற்கே மரியாதை கொடுக்காத நீங்கள் எப்படி மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பீர்கள்?

வரலாறு தந்த மாபெரும் வாய்ப்பை தவற விட்டு விட்டீர்கள் அண்ணா. ஒருகாலும் இந்த மண்ணில் அரசியல் மாற்றத்தை வலதுசாரி சிந்தனையோடு உங்களால் கொண்டு வர முடியவே முடியாது.

இனிமேல் என்னால் வலதுசாரிகளின் வழிகாட்டுதலின் நீங்கள் பேசும் அரசியலின் பெயரால் தமிழுக்கும் தமிழ் தேசியத்திற்கும் துரோகம் செய்ய முடியாது. சங்கியாகவும் செயல்பட முடியாது என்ற காரணத்தால் நான் உயிருக்கு உயிராக நேசித்து தொடங்கிய வளர்த்த கட்சியிலிருந்து கனத்த இதயத்தோடு விளக்குகிறேன் அண்ணா. நன்றி.” என்று ஜெகதீச பாண்டியன் தெரிவித்துள்ளார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *