June 23, 2026
இளையராஜா

இளையராஜா Image Source: x/ @ilaiyaraaja

Build Your Website in Minutes with One-Click Import – No Coding Hassle!
Share

எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்

இசை வடிவம் சார்ந்தும், பாடல்களின் உள்ளடக்கம் சார்ந்தும் வெகுஜன இசையில் பல்வேறு வகைமைகள் இளையராஜாவால் உருவாகியிருக்கின்றன. அவை பின்னால் வருபவர்களுக்கான வகை மாதிரியாகவும் நின்றிருக்கின்றன. அவற்றுள் ஒன்று அவர் இசையில் உருவான அம்மா பாடல்கள்.

அம்மா பாடல்களை உருவாக்கியதில் இளையராஜாவோடு ஒப்பிட வேறு யாரும் இல்லை. வேறு இந்திய மொழிகளில் இந்த அளவிற்கு அம்மா பாடல்கள் உருவாகியிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. அம்மா பாடல்கள் திரைப்பட கதைக்காக எழுதப்பட்டன என்பது மறைந்து இளையராஜாவின் பாடல்களாகவே மாறிவிட்டிருப்பதை நாம் அன்றாடத்தில் பார்க்கலாம்.

இளையராஜா பாடல்களில் இருக்கும் அம்மா என்பது வேறு யாருமல்ல. அது இளையராஜாவின் அம்மாவே தான். அந்த வகையில் இளையராஜாவின் தாயை ‘உள்ளூர் தாய்’ எனலாம். அந்த தாய் ஏழைத்தாய். பசி பட்டினியை பொறுத்துக்கொண்டு தன் பிள்ளைகளின் பசி போக்கியவள். தனக்கான ஆசைகளை புதைத்துவிட்டு பிள்ளைகளின் கனவுகள் ஈடேற உழைத்தவள்; மொத்தத்தில் இளையராஜாவின் தாய் என்பவர் மாசற்ற தியாக உரு.  அவருடைய கரகரப்பான மென்சோக குரல் தமிழ் பாமரனின் அம்மாவையே பிரதிபலித்தது.

இளையராஜாவும் படங்களுக்காக இப்பாடல்களை பாடும் போது அதை மறந்து தன் அம்மாவுக்காக தான் பாடினார். ஒரு கட்டத்தில் அம்மா பாடல்களை பெறுவதற்காக இளையராஜாவின் ‘உள்ளூர் தாயை’ போலச்செய்து அம்மா பாத்திரங்களை இடம்பெறச் செய்தனர்.

பாடலாசிரியர்கள் படத்திற்காக எழுதினாலும் இளையராஜா அவர் அம்மா நோக்கி பாடுவதாக  நினைத்து  எழுதத் தொடங்கினார்கள். அவர் இசையை மனதில் வைத்து பாடல் மைய படங்கள் (மைக் மோகன்) உருவானதைப் போன்ற போக்கு இது. இருபதாம் நூற்றாண்டில் வெகுஜன கலை மற்றும் வெகுஜன அரசியல் மூலம் தமிழ் வாழ்வை பாதித்த கருணாநிதி, எம்ஜிஆர், இளையராஜா ஆகிய மூவரின் நினைவுகளும் தாயையே சுமந்து நின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

“பாளையம் பண்ணபுரம் சின்னதாய் பெத்த மகனில்”ஆரம்பித்து விட்டாலும் எண்பதுகளின் நடுப்பகுதியிலிருந்தே இளையராஜாவிடம் அம்மா பாடல்கள பிரவாகம் பெறுகின்றன. முத்தைய பாடல் மைய படங்களில் அதிகம் மோகன் இருந்ததை போல, இக்காலத்தைய அம்மா பாடல்களில் அதிகம் ராமராஜன் இடம்பெற்றார்.  இவ்வாறு வெகுஜன கலை மூலம் இளையராஜாவின் அம்மா தமிழ் “அம்மா”களுக்கான குறியீடு ஆனார்.

இன்றைக்கும் இளையராஜா குரலில் (அவர் குரலில் தான்) அம்மா பாடல்களை கேட்கும் போது தான் மறந்திருக்கும் அம்மாவின் நினைவு மறு கவனத்திற்கு கொணரப்படுகிறது என்றால் அது மிகையில்லை.

தாய்ப்பாசத்தை கட்டமைப்பதாகவும், கண்டுபிடித்து தருவதாகவும் கூட அவர் பாடல்கள் இருந்திருக்கக்கூடும் என்றுத் தோன்றுகிறது. இந்த விதத்தில் அவரின் இவ்வகைப் பாடல்கள் ஆராயத் தக்கதாக இருக்கிறது.

அம்மா பாடல்களின் வரிகள் ஒரு புறமிருந்தாலும், இளையராஜா குரலிலிருக்கும் மென்சோகம் அந்த பாடலுக்கு நீங்கா சோகத் தன்மையை தந்து விடுகின்றன. அவற்றை அப்பாடல்களின் காவியத்தன்மை எனலாம். அவருடைய அம்மா பற்றிய பெரும்பாலான பாடல்களில் தாயின் தியாகம் ஒருபுறமாகவும், அது தீர்க்க முடியாத கடன் – எனவே அவற்றை தீர்க்க முடியாத குற்றவுணர்வு ஆகியவை மறுபுறமாகவும் இருக்கின்றன. ஒரு உள்ளூர் ஏழை தாய் தமிழர்களின் சமூக நினைவுகளில் காவியத்தாய் ஆகியிருப்பது இவ்வாறு தான். மேலும், அவ்விடத்தில் இளையராஜாவின் தாய் மறைந்து பொதுவாக தாய் என்னும் குறியீடு நிலைகொள்கிறது.

சித்தர்கள்- தாயுமானவர் ஆகியோர் பாடல்களிலும் தனிப்பாடல்களிலும் இளையராஜா கொண்டிருந்த ஆர்வத்தின் தாக்கத்தை இப்பாடல்களில் தேட முடியும். அம்மா பாடல்களை சோகத்தில் தொடங்கி இழப்புணர்வின் கேவல்களை வெளிப்படுத்துபவராக மாறினார். “என் தாய் என்னும் கோயிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியே” என்ற பாடல் இத்தகைய கேவலின் உச்சம். வாலி எழுதிய அப்பாடலில் பட்டினத்தாரின் தாய் பற்றிய கேவலை காணமுடியும். இது எல்லாவற்றையும் விட இளையராஜா கொண்டிருக்கும் ஆன்மீக நம்பிக்கையின் அடித்தளத்தை அவருடைய அம்மா பற்றிய இசைக் கோலங்களில் வாசிக்க முடியும் என்றுத் தோன்றுகிறது.


About The Author