April 29, 2026
guest lecturer
Share

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் யு.ஜி.சி நிர்ணயித்த ஊதியத்தை வழங்கக் கோரியும் தொடர்போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு டி.ஆர்.பி மூலமாக கல்லூரி பேராசிரியர்களுக்கான தேர்வை அறிவித்துள்ளது. அதே நேரத்தில், யு.ஜி.சி நிர்ணயித்த ரூ.50,000 ஊதியம் வழங்காமல் ரூ.25,000 மட்டுமே வழங்கி வருகிறது. கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை தொடர்ந்து தமிழக அரசு புறக்கணித்து வருவதால், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கௌரவ விரிவுரையாளர்களை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் சி.பி.எம் மாநில செயலாளர் பெ. சண்முகம், முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர்செல்வம், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

பெ. சண்முகம், மாநிலச் செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

பணி நிரந்தரம் செய்ய வேண்டும், யு.ஜி.சி நிர்ணயித்த ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வரும், அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழகம் முழுவதும் 171 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 7300 கௌரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகின்றனர். தற்போது இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 25,000 வழங்கப்பட்டு வருகிறது. மே மாத ஊதியம் வழங்கப்படுவதில்லை.மேலும் இவர்களுக்கு மருத்துவ விடுப்பு, பேறுகால விடுப்பு போன்றவை மறுக்கப்பட்டு வருகிறது.

பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மாத ஊதியம் ரூ. 50,000 வழங்க வேண்டும் எனவும், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை வைத்து ஒருவார காலமாக போராடி வருகின்றனர்.

நியாயமான கோரிக்கைகளுக்காக, ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்தி வரும் கௌரவ விரிவுரையாளர்களை மாநில அரசு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதற்கு உரிய தீர்வு காண வேண்டுமெனவும், போராடும் பேராசிரியர்கள் மீது துறைசார் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது சரியான அணுகுமுறையாகாது, அதனை கைவிட வேண்மெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.” என்று சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

“20 ஆண்டுகளுக்கு மேலாக சொற்ப ஊதியத்தில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய திமுக அரசை முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு உயர்கல்வியை போதிக்கும் உன்னதமான பணியினை கடந்த 20 ஆண்டு காலமாக கௌரவ விரிவுரையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர் ஆனால் அவர்களுக்கு உரிய ஊதியம் அளிக்கப்படுகிறதா என்றால் இல்லை.

தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 7 அரசு கல்வியில் கல்லூரிகள் என மொத்தம் 171 அரசு கல்லூரிகளில் 7,300 க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர் இவர்கள் அனைவரும் முதுகலை பட்டம் முனைவர் பட்டம் ஆகியவற்றைப் பெற்று தங்கள் பணி என்றாவது ஒருநாள் நிரந்தரம் செய்யப்படும் என்ற எண்ணத்தில் மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை அதாவது ஒரு ஆண்டிற்கு 11 மாத சம்பளம் மட்டுமே பெற்று வருகின்றன இவர்களை பெரும்பாலான 45 வயதை கடந்தவர்கள்.

மேற்படி கௌரவ விரிவுரையாளர்களுக்கு 57,500 மாத ஊதியம் தர வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டிருந்தது இந்த ஊதியத்தினை தர சென்னை உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது இருந்தாலும் இதுநாள் வரை இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை அதே சமயத்தில் கள்ளிப்பணியைத் தவிர நிர்வாகப் பணிகளும் கௌரவ விரிவுரையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன கூடுதல் ஊதியம் தருவதற்கு பதிலாக கூடுதல் பணியை அளித்து வரும் அரசாக திமுக அரசு விளங்குகிறது.

இந்த நிலையில் பல்கலைக்கழகம் மானிய குழு நிர்ணயத்த ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் சென்னையில் உயர் நீதிமன்ற தீர்ப்பினை செயல்படுத்த வேண்டும் தங்களது பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் கடந்த ஒரு வார காலமாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர் இவர்களை அழைத்துப் பேசாமல் அந்தக் கல்லூரி முதல்வர்கள் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கௌரவ விரிவுரையாளர்களுக்கு அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது இது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்.

முதலமைச்சர் இதில் உடனடியாக தனிக்கவனம் செலுத்தி அவருடைய கோரிக்கையில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கௌரவ விரிவுரையாளர்களை அழைத்து பேசி பல்கலைக்கழக மானிய குழு நிர்ணயித்த ஊதியத்தை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புப்படி நடைமுறைப்படுத்தவும் படிப்படியாக அவர்களை நிரந்தரம் செய்யவும் போராட்டக் காலத்தை பணிக்காலமாக கருதி அவர்களுக்குரிய ஊதியத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணா திராவிடர் முன்னேற்ற கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.” என்று ஓ.பன்னீர்ல்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா

நெடுங்காலம் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் கவுரவ விரிவுரையாளர்களாக 7,300 க்கும் மேற்பட்டவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் முறையாக தேர்வு செய்யப்பட்டு சற்றேற குறைய 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

பல்கலைக்கழக மானிய குழு இது போன்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு 57 ஆயிரத்து 500 மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இதனை உயர்நீதிமன்றமும் உறுதி செய்திருப்பதாக தெரிகிறது. ஆனால் இதுவரை அவர்களுக்கு அந்த ஊதியம் வழங்கப்படவில்லை.

எனவே உயர் நீதிமன்ற தீர்ப்பினை செயல்படுத்த வேண்டும் என்று கவுரவ விரிவுரையாளர்கள் ஒரு வார காலமாக வகுப்புகளுக்கு செல்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு உரிய முன் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்த ஊதியம் வழங்குவதோடு அவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.” என்று எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

கு. இராமகிருட்டிணன், பொதுச் செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்

தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு அரசின் கலை அறிவியல் கல்லூரிகளில் மிக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட- ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து முதல் தலைமுறை பட்டதாரிகளாக படித்து வந்தவர்களாவார்கள்.

இவர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் வழங்கிட வேண்டுமென்று பல்கலைக்கழக மாணியக்குழு பரிந்துரையும் அதையொட்டி அந்த பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றிட வேண்டுமென்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பையும் உடனடியாக நடைமுறைப் படுத்திட வேண்டுமென்றும்,பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்திவரும் கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு கனிவுடன் கவனித்து ஆவணச் செய்திட மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.:” என்று தெரிவித்துள்ளார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *