April 29, 2026
PR Pandian xy
Share

குறுவை பாசனத்திற்கு தண்ணீரை உறுதிப்படுத்தும் வகையில் மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீரை சேமித்து வைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் எனவும் நெல் குவிண்டாலுக்கு ரூ.3500 வழங்க வேண்டும் எனவும் பிஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “காவிரி டெல்டா மாவட்டங்கள் சென்ற 2ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளனர்.2023 ஆம் ஆண்டு சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் இல்லாமல் வரலாற்றில் இல்லாத நிலையில் ஆகஸ்ட் 7ம் தேதியே மேட்டூர் அணை மூடப்பட்டது. வடகிழக்கு பருவமழையை நம்பி சாகுபடி செய்து மகசூல் இழப்பை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டும் தொடர்ந்து 2வது ஆண்டாக குறுவைக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது மேட்டூர் அணையில் தண்ணீர் 115 அடி உள்ள நிலையில் தமிழக அரசு சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துவதற்கு அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காலநிலை மாற்றத்தால் ஒருபோக சாகுபடி என்பது நம்பிக்கை இழந்த நிலையில் குறுவையை விவசாயிகள் எதிர்பார்க்கும் நிலை உள்ளது.

எனவே மேட்டூர் அணை தண்ணீரை மட்டுமே நம்பி சுமார் 10 லட்சம் ஏக்கரில் காவிரி டெல்டாவில் மட்டும் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வேறு வருவாய் இல்லாத நிலையில் விவசாயிகள் குறுவை சாகுபடியை மிகுந்த நம்பிக்கை உடைய எதிர்பார்ப்பாக உள்ளது.

எனவே தமிழ்நாடு அரசு மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரை முறைப்படுத்தி சிக்கனமாக பயன்படுத்தி 100 அடிக்கு குறையாமல் ஜூன் மாதம் வரையிலும் தண்ணீரை சேமித்து வைப்பதற்கான அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வரும் ஜூன் 12-ஆம் தேதி குறுவைக்கு தண்ணீர் திறப்பை தமிழ்நாடு அரசு முன்கூட்டியே உறுதிப்படுத்த வேண்டும்.அதற்கான திட்டமிடலோடு தமிழக அரசு மேட்டூர் அணையை உரிய காலத்தில் மூடப்பட்டு தண்ணீரை சேமித்து பாதுகாப்பதற்கு முன்வர வேண்டும்
என தமிழ்நாடு முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.

தற்போது சம்பா சாகுபடி அறுவடை துவங்கும் நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கொள்முதல் செய்வது தடைபட்டுள்ளது. ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உரிய தொகை உரிய காலத்தில் விடுவிக்காமல் காலங்கடத்தப்படுகிறது.எனவே தமிழ்நாடு அரசு தேவையான இடங்களில் கடந்த காலங்களில் செயல்பட்ட கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்கப்பட வேண்டும். தடையின்றி நெல் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் தொடங்கிட வேண்டும். நெல்லுக்கான தொகையை விவசாயிகளுக்கு உடனுக்குடன் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பல்வேறு மாவட்டங்களில் பேரழிவு பெருமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களும்,முதிர்ந்த பயிர்களும் சாய்ந்து அழிந்து உள்ளது. அவ்வாறு அழிந்து போன பயிர்களை வெளிப்படை தன்மையோடு கணக்கெடுப்பு நடத்தி பயனாளிப் பட்டியலை கிராமங்கள் தோறும் வெளியிட வேண்டும். பாகுபாடு இல்லாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இடுபொருள் இழப்பீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

பயிர் காப்பீடு செய்து பாதிக்கப்படும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தனிநபர் காப்பீடு திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த முன்வர வேண்டும்.

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 3500ம், கரும்பு டன் ஒன்றுக்கும் ரூ5000 ம் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *