உலக மக்கள் அனைவரையும் இணைக்கும் பாலமாகவும் – காலத்தால் அழியாத எளிய ஊடகமாகவும் வானொலி தொடர்பு இருப்பதைப் பாராட்டி பிரதமர் மோடி தகவல் வெளியிட்டுள்ளார்.
உலக வானொலி தினம் கடந்த 2011-ம் ஆண்டு யுனெஸ்கோ உறுப்பு நாடுகளால் அறிவிக்கப்பட்டது. பின்பு 2012-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் சர்வதேச தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தகவல்கள், கலாச்சாரம் மற்றும் சமூக உரையாடல்களை உருவாக்குவதில் முக்கியமான தளமாக வானொலி விளங்குகிறது. இதன் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதத்தில் ஆண்டுதோறும் பிப்.13ஆம் தேதி வானொலி தினம் கொண்டாடப்படுகிறது.
தொலைக்காட்சி, ஸ்மார்ட் போன்களின் வளர்ச்சிக்கு மத்தியில், வெகுமக்கள் தொடர்பில வானொலி ஒரு தனித்துவமான பங்கினை வகித்து வருகிறது. அது மக்களுக்கு செய்திகள், பொழுதுபோக்கு மற்றும் கல்வியில் முக்கியமான ஆதாரமாக விளங்கி வருகிறது.
அதிலும் குறிப்பாக ‘கம்யூனிட்டி ரேடியோ’ எனப்படும் சமூக வானொலிகள், பிரதிநிதித்துவப்படுத்தப்படாத குரல்களை வெளியே கொண்டு வருவதிலும், காலநிலை மாற்றம் உள்ளிட்ட சமூக மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் விழிப்புணர்வினை ஏற்படுத்துகிறது.
சர்வதேச வானொலி தினம், இன்றும் நீடித்து வரும் வானொலியின் தேவை, உரையாடல்கள் உருவாக்குவதில் அதன் பங்கு, புவியியல் மற்றும் கலாச்சார எல்லைகளைக் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் அதன் திறனையும் நினைவூட்டுகிறது.
