June 23, 2026
SP Udhayakumaran x
Share

இல்லாத ஊருக்குப் போகாத வழியை இந்திய அரசும், அதன் அணுசக்தித் துறையும் கடந்த 77 ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றன என்றும் ஒன்றிய அரசின் அணு மின் திட்டம் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்று அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் சுப. உதயகுமாரன் கூறியுள்ளார்.

அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் சுப. உதயகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த ஆண்டு பட்ஜெட்டில் SMR எனப்படும் சிறு வடிவமைக்கப்பட்ட அணு உலைகளுக்கு Bharat Small Reactor என்று பெயரிட்டு, நாடெங்கும் நிறுவப் போகிறோம் என்றார்கள். இன்றுவரை ஓர் உலைகூட எங்கேயும் நிறுவவில்லை.

இப்போது 2047-ஆம் ஆண்டுக்குள் 100 GW அணு மின்சாரம் தயாரிக்கப் போகிறார்களாம். இன்றைய நிலையில் வெறும் 8,000 MW மட்டுமே தயாரிக்கும் நிலையில் இது சாத்தியமே இல்லை.

A1, A2, A3 என்றறியப்படும் அதானி, அம்பானி, அனில் அகர்வால் முதலாளிகளின் நிறுவனங்களுடன் கைகோர்த்து அணு மின்சாரம் தயாரிக்கப் போகிறார்களாம். 125 பில்லியன் டாலர் முதலீட்டில் இந்த வியாபாரம் நடக்கப் போகிறதாம். அவர்கள் சம்பாதிப்பார்கள், நாம் நாசமாய்ப் போவோம்!

தனியார் கொள்ளை லாபம் சம்பாதிக்கவும், வெளிநாட்டு கார்ப்பரேட்டுகள் பொறுப்பேதுமின்றி கிடைப்பதைச் சுருட்டிச் செல்லவும் உதவும் நோக்கில் அணுசக்திச் சட்டம் 1962, இழப்பீடுச் சட்டம் 2010 போன்றவற்றை மாற்றியைக்க ஒன்றிய அரசு திட்டமிடுகிறது. இந்திய மக்கள் கைவிடப்படும் ஆபத்து இதில் தொக்கி நிற்கிறது.

அணுசக்தி தூய்மையானது என்று ஒன்றிய அமைச்சர் நற்சான்றிதழ் வழங்குகிறார். அணுமின் நிலையங்களில் இருந்து கார்பன் உமிழ்வு வெளிவருவதில்லை தான். ஆனால் 42,000 ஆண்டுகள் மிகவும் கவனமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய ஆபத்தானக் கழிவுகள் வெளிவருகின்றனவே? அதை எப்படிச் சமாளிக்கப் போகிறோம்?

மாசுபடுத்தப்பட்ட காற்று பெரும் பிரச்சினைதான். ஆனால் நஞ்சாக்கப்பட்ட பூமி எப்படி அதற்கு பதிலாக அமைய முடியும்?

ஓர் அணுமின் நிலையத்தை நிர்மாணிக்க நாம் எடுத்துக்கொள்ளும் 20-30 ஆண்டுகள் நாம் கார்பன் உமிழும் மின்சாரத்தையே பயன்படுத்துகிறோம். அணுமின் நிலையம் இயங்கும் 40-60 ஆண்டுக்காலம் கார்பன் உமிழும் மின்சாரத்தைத்தான் நிலையத்தை இயக்குவதற்கு பயன்படுத்துகிறோம். அணுமின் நிலையத்தைச் செயலிழக்கச் செய்யும்போதும் (decommissioning) கார்பன் உமிழும் மின்சாரமே பயன்படுத்தப் படுகிறது. பின்னர் அணுக்கழிவுகளை மேலாண்மை செய்யவும் இதே அழுக்கான, மாசுபட்ட மின்சாரமே பயன்படுத்தப்படுகிறது. எனவே அணு மின்சாரம் தூய்மையானதும் அல்ல, பசுமையானதும் அல்ல.

மக்கள் அதிகமாக, நெருக்கமாக வாழும் நம்முடைய நாட்டிற்கு அணு மின்சாரம் பாதுகாப்பானதல்ல. ஒன்றிய அரசு இந்திய மக்களின் நலன்களைப் பாதுகாக்க முயலவேண்டுமே அன்றி, கார்ப்பரேட்டுகளுக்காக வேலை செய்யக் கூடாது.

ஆக, ஒன்றிய அரசின் அணுமின் திட்டம் சற்றும் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல! அதனை முழுமையாகத் திரும்பப்பெற வலியுறுத்துகிறோம்.” என்று சுப. உதயகுமாரன் கூறியுள்ளார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *