எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் Image Source: facebook/ stalinrajangam
எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்
கடந்த 10, 15 ஆண்டுகளில் பலருக்கான அரசியல் அறிமுகம் களப்பணி, வாசிப்பு சார்த்து உருவானதை விட சமூக வலை தளங்கள் மூலம் உருவாகியிருக்கின்றன. இவ்வாறு உருவாகி வந்திருக்கும் பலரை ‘முற்போக்காக சிந்திக்கிறோம் என்று நம்ப வைத்திருக்கிறது இந்த சமூக வலைதள யுகம்.
சமூக வலைதளத்தின் முக்கியமான எதிர்மறையென்பது தன் தரப்பை நிறுவ எதிர் தரப்பின் எத்தகைய நியாயத்தையும் கணக்கில் கொள்ளாமல் எந்த அளவிற்கும் சென்று தாக்கலாம் என்றாக்கியிருப்பது தான். இப்போக்கில் நேரில் சந்தித்துக் கொள்ளாமலே – ஓரிடத்தில் சென்று கூடாமலேயே புலப்படாத புதிய குழுக்கள் உருவாகி இருக்கின்றன. இத்தகைய முற்போக்கினர் தலித்துகளின் பிழைகளை விமர்சிக்கும் அரசியல் ‘சரித்தன்மை’ தங்களுக்கிருப்பதாக கருதுகின்றனர்.
நீலசங்கி என்ற பட்டம் இத்தகைய இணைய குழுவினரால் தான் வளர்த்தெடுக்கப்பட்டன.
சாதியமைப்பின் விளைவுகளை அன்றாடம் சந்தித்துக் கொண்டிருப்போரை நோக்கி சாதிய Previlage-ல் இருப்போர் இத்தகைய பட்டங்களை சூட்ட முடியுமென்பது எத்தகையதொரு அறிவு வன்முறை?
இவர்கள் ஒவ்வாமை கொள்வதற்கென்று சில பேரை தேர்ந்தெடுத்து வைத்திருப்பார்கள். அவர்களை சாக்காக வைத்து மொத்த தலித் குரல்கள் மீதான தங்கள் ஒவ்வாமையை கட்டமைப்பார்கள். தலித்துகள் 1990-களுக்கும், அதற்கு முன்பிருந்தும் நடத்தி வந்த விவாதங்கள் எதுவும் இவர்களுக்குத் தெரியாது. அத்தகைய விவாதங்களிலிருந்து கற்றுக் கொள்வதற்கு எதுவும் இருக்காது என்று நினைக்கிறார்கள்.
ஆணவக் கொலைகள், புதிய புதிய வடிவங்களில் சாதி வன்முறைகள், கொலைகள் என்று பல பிரச்சினைகள் நடக்கின்றன. (சமூகவலைதளங்கள் மட்டுமே களமில்லை என்றாலும்) இவ்வாறான பிரச்சினைகள் பற்றி இவர்களில் பலரும் கனத்த மௌனம் காக்கின்றனர்.
இதன்பொருள் அவர்கள் தலித்துகள் பற்றி எதுவும் எழுதுவதில்லை என்பதில்லை. மாறாக அவர்களை எதிர்மறையாக எழுத வாய்ப்பிருக்கும் போது மட்டும் தவறாமல் ஆவேசங்காட்டி எழுதிவிடுவதை நீங்கள் பார்த்து விட முடியும்.
