June 23, 2026
leaders reactions
Share

பிரதமர் மோடி பொருப்பேற்று 11 வது பட்ஜெட்டாகவும், தொடர்ந்து நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 8வது பட்ஜெட்டாக தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசின் பட்ஜெட் குறித்து தமிழக தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

மத்திய பட்ஜெட் குறித்து மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஒன்றிய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே?

எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை?

நெடுஞ்சாலைகள் – இரயில்வே திட்டங்கள் – கோவை, மதுரை மெட்ரோ இரயில் எதையுமே கொடுக்காதது ஏன்? எது தடுக்கிறது?

பொருளாதார ஆய்வறிக்கை, உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை அறிக்கை, நிதி ஆயோக் அறிக்கை என ஒன்றிய அரசின் அனைத்து அறிக்கைகளிலும் முதன்மையான இடத்தைப் பிடிக்கிறது தமிழ்நாடு. பக்கத்துக்குப் பக்கம் தமிழ்நாட்டின் செயல்பாடுகளுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்படுகிறது. ஆனால், நிதிநிலை அறிக்கையில் மட்டும் இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்படுவது ஏன்?

தமிழ்நாடு ஏற்காத கொள்கைகளையும் மொழியையும் திணிப்பதில் காட்டும் ஆர்வத்தில் சிறு துளியையாவது நிதி ஒதுக்கீட்டில் காட்ட வேண்டாமா?

ஒன்றிய அரசானது தன்னுடைய திட்டங்களில் தன்னுடைய பங்குத் தொகையைக் குறைத்து கொண்டே வருவதால், மாநில அரசின் நிதிச்சுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல்வேறு திட்டங்களில் மிகவும் குறைவாக மானியத் தொகையை வழங்கும் ஒன்றிய அரசு, அதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழ்நாட்டிற்கு மட்டும் விதித்துள்ளது. விளம்பர மோகம் கொண்ட ஒன்றிய அரசு, திட்ட விளம்பரங்களில் ஒன்றிய அரசின் முத்திரை இடம் பெறாவிட்டால், திட்டம் சரியாகவும் செம்மையாகவும் செயல்படுத்தப்பட்டிருப்பினும், நமக்குச் சேரவேண்டிய திட்ட நிதியை விடுவிப்பதில்லை. விளம்பரம் ஒன்றையே பாராட்டும் ஒன்றிய அரசு, மக்கள் நலனில் எந்தவொரு அக்கறையையும் காட்ட மறுக்கிறது.

வெற்றுச் சொல் அலங்காரங்களும், வஞ்சனையான மேல் பூச்சுகளும் கொண்ட அறிக்கையின் மூலமாக இந்திய நாட்டு மக்களை வழக்கம் போல் ஏமாற்றும் பா.ஜ.க.,வின் பம்மாத்து நாடகம் தொடர்கிறது.

எந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதோ, எங்கு பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் உள்ளதோ அந்த மாநிலத்துக்கு மட்டும்தான் திட்டங்களும் நிதியும் அறிவிக்கப்படும் என்றால் ‘ஒன்றிய’ நிதிநிலை அறிக்கை என இதனை அழைக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு எந்தவிதமான சிறப்பு திட்டங்களும் இல்லை – எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “2024-25 பொருளாதார ஆண்டறிக்கையில், குறிப்பிட்ட பொருளாதார வளர்ச்சியை எட்ட, முதலீட்டு மூலதனத்தை ஊக்கப்படுத்தவும், உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க வேண்டிய அவசியம் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் ஆகியவர்களை மையமாக கொண்டு 2025-26 நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிதி நிலை அறிக்கையில் வருமான வரி விலக்கு கணிசமாக உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்க அம்சமாகும்.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்த அடிப்படை சுங்கவரிகளில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது.

பீகார் மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு அம்மாநிலத்திற்கு மட்டும் பல வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளதால், மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை என கூறுவதை விட, பீகார் மாநில வரவு – செலவு நிதிநிலை அறிக்கை என கருதும்படி அமைந்துள்ளது.

தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு எந்தவிதமான சிறப்பு திட்டங்களும் இல்லை.

விவசாயத்துறையை பொருத்தவரை 100 மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டங்கள் உள்பட சில திட்டங்களை அறிவித்துள்ளார்கள். இந்த திட்டங்களில் விவசாயிகளுக்கு உற்பத்தியை பெருக்கவும், இடுபொருள் விலையை கட்டுப்படுத்தவும், விளைப்பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்யவும், அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும் தமிழ்நாட்டிற்கு எவ்வாறு உதவும் என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

தமிழ்நாடு மாநிலம் நீர் பற்றாக்குறை மாநிலமாகும். விவசாய வளத்தை பெருக்கவும், விரையமாகும் நீரை பயன்படுத்த உதவும் நதி நீர் இணைப்பு திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

அதேபோல் சிறு குறு தொழில்களுக்கும், ஏற்றுமதிக்கும் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவும், திறன் மேம்பாட்டு பயிற்சியுடன் புதிய வேகத்தை கொடுக்கவும் திட்டங்கள் ஏதும் இல்லை.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் மற்றும் கோவை, மதுரை ஆகிய நகரங்களின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு எவ்வித அறிவிப்பும் நிதி நிலை அறிக்கையில் இல்லாதது தமிழ்நாட்டிற்கு ஏமாற்றம் அளிக்கிறது.

10 ஆண்டுகளுக்கு மேல் 8 சதவீதத்திற்கு குறையாத பொருளாதார வளர்ச்சியை அடைந்தால்தான் 2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய முடியும் என பொருளாதார அறிக்கை கூறுகிறது. இந்நிதி நிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரம்பை மட்டும் உயர்த்தியுள்ளதால் ,

இது ஒரு மாயாஜல அறிக்கையாக, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கையாக தோன்றுகிறது.

பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 8% எப்படி உயர்த்தப்படும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மக்களிடையே, மாநிலங்களிடையே பாகுபாடு காட்டி, இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் நிதிநிலை அறிக்கை – திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் மத்திய பட்ஜெட் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இன்று அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையைத் தனது கூட்டணிக் கட்சிகளைத் திருப்தி செய்வதற்காகவே பாஜக அரசு பயன்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதால் இந்திய ஒருமைப்பாடே சீர்குலையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மோடி அரசின் ஓர்வஞ்சனைப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகார் மாநிலத்தில் தேசிய உணவுத் தொழில் நுட்ப நிறுவனம் ( என்.ஐ.எஃப்.டி ) அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் விளையும் மக்கானா பயிரை மேம்படுத்துவதற்காக வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது. பீகாரில் கிரீன் ஃபீல்ட் விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பாட்னாவில் இருக்கும் ஐஐடி விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்காக ஒரு அறிவிப்புகூட இல்லை. இது அப்பட்டமான ஓரவஞ்சனை ஆகும்.

இந்த நிதிநிலை அறிக்கையில் செய்யப்பட்டுள்ள புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இந்த ஆண்டில் கூடுதலாகப் பத்தாயிரம் மருத்துவப் படிப்பு இடங்கள் உருவாக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் மருத்துவத் துறைக்கான ஒதுக்கீட்டில் அதற்காகக் கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.

அணுசக்தி மின்சாரத்தை அதிகம் உருவாக்கி நம்முடைய மின்சாரத் தேவையை நிறைவேற்றுவோம் என சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு அந்தத் துறைக்கு ஒதுக்கப்பட்டதைவிட இந்த ஆண்டு 920 கோடி குறைக்கப்பட்டிருக்கிறது.

‘ஜிக்’ ( Gig) தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிற நலத்திட்டங்கள் எதற்கும் நிதி ஒதுக்கீடு இல்லை.

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருக்கும் நூறு நாள் வேலை திட்டத்துக்குக் கடந்த ஆண்டு ரூ.86,000 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டும் அதே தொகைதான் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் மூன்று கோடி புதிய வீடுகளைக் கட்டுவோம் எனக் குடியரசுத் தலைவர் உரையிலும் இந்த பட்ஜெட்டிலும் அறிவித்திருக்கிறார்கள். ஆனால் அதற்கான கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முதல் ‘எஞ்சின்’ விவசாயத்துறை என்று அறிவித்துள்ளார் நிதியமைச்சர். கடந்தாண்டு விவசாயத் துறைக்கான ஒதுக்கீடு ரூ. 1,31,195 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு ரூ. 1,27,290 கோடியாக அது குறைக்கப்பட்டுள்ளது. ரூ.3900 கோடியைக் குறைத்துள்ளனர்.

பொருளாதார வளர்ச்சியின் இரண்டாவது எஞ்சினாக நிதி அமைச்சரால் குறிப்பிடப்பட்டிருக்கும் சிறு குறு நடுத்தர தொழில்கள் துறைக்குப் பல அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. ஐந்து லட்சம் எஸ் சி. எஸ் டி மகளிரைத் தொழில் முனைவோராக ஆக்குவோம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு இந்தத் துறைக்கு பட்ஜெட்டில் ரூ. 22138 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் அதில் சுமார் ரூ. 5 ஆயிரம் கோடியைக் குறைத்து ரூ.17306 கோடிதான் செலவிடப்பட்டது. இந்த ஆண்டில் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டதை விட 5% க்கும் குறைவாகவே உயர்த்தப்பட்டுள்ளது.

எஸ்.சி மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்காகக் கடந்த ஆண்டு ரூ. 6360 கோடி ஒதுக்கப்பட்டு, திருத்தப்பட்ட பட்ஜெட்டில் அதில் ரூ.760 கோடி குறைக்கப்பட்டது. இந்த ஆண்டும் அதே ரூ. 6360 கோடி மட்டும் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதிலும் எவ்வளவு தொகையை வெட்டிக் குறைப்பார்கள் என்பது தெரியவில்லை.

தேசிய ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப் திட்டத்திற்கு வெறும் ரூ.130 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல மாநில அரசுகளே இதைவிட அதிகமான தொகையை ஒதுக்குகின்றன.

எஸ்சி, எஸ்டி துணைத்திட்டங்களின் அடிப்படையில் பட்ஜெட்டில் எஸ் சி, எஸ்டி மக்களின் மக்கள் தொகைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால் பாஜக அரசு அவர்களுக்கு ஒதுக்க வேண்டிய தொகையில் பாதியைக் கூட ஒதுக்கிடவில்லை.

சிறுபான்மை மதங்களைச் சார்ந்த மாணவர்களுக்குப் பள்ளிக் கல்வி படிப்பதற்கான ‘பிரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப்’ தொகைக்காக கடந்த பட்ஜெட்டில் ரூ. 326 . 1 6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அதில் வெறும் ரூ. 90 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. இந்த ஆண்டு அந்தத் திட்டத்துக்காக ரூ.195 .70 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். ” என்று தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு எதிரான பட்ஜெட் – பெ. சண்முகம்

ஒன்றிய பாஜக அரசின் 2025-26ஆம் நிதியாண்டிற் கான பட்ஜெட், வழக்கம்போல முதலாளிகளுக்கு சாதகமான மற்றும் ஏழை மக்களுக்கு எதிரான பட்ஜெட் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக திருவாரூரில் அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

நிதிநிலை அறிக்கையானது, வழக்கம்போல் ஏழை மக்களுக்கு எதிராகவும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சி கள் ஆளுகின்ற தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் புறக்க ணிக்கப்பட்டுள்ளன. மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு நிதி ஒதுக்கவேண்டுமென தொடர்ச்சியான கோரிக்கைகள் விடுக்கப்பட்டும், அதை தொடங்கு வதற்கான எவ்வித நிதியும் ஒதுக்கீடும் செய்யப்பட வில்லை.

அதேபோல் தமிழக முதல்வர் மெட்ரோ 2 திட்டத்துக்கு நிதி ஒதுக்கக் கோரி கடிதம் எழுதியுள்ளார். அந்த திட்டத் துக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நிதி ஒதுக்கீடு விசயத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாரபட்சம் என்பது இன்னமும் தொடர்கிறது. அதேநேரம், தங்களை ஆதரிக்கும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கூடுதல் திட்டங்கள், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையில் வருமானவரித்துறையில் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படு கிறது. தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் வருகின்ற 5 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற விருக்கிறது. மத்திய தர மக்களின் வாக்குகளை பெறு வதற்காகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டி ருக்கிறது. வருமானவரித்துறை குறித்து ஒரு புதிய சட்டம் இயற்றப்படும் என அறிவித்திருப்பதன் மூலம் வாக்குகளை பெறுவதற்கான அறிவிப்பு என்பது தெளி வாகிறது.

வேலையின்மையை போக்குவதற்கான எந்த வித அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை. வேலையின்மை என்பது இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பெரும் பிரச்சனையாக இருக்கிறபோது, அதை போக்கும் வகையிலான நடவடிக்கைகள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. மாறாக, கிராமப்புறங்களில் 100 நாள் திட்டத்துக்கு கடந்தாண்டு வழங்கப்பட்ட அதே ரூ.86 ஆயிரம் கோடியை திரும்பவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செம்மைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ச்சியாக பலரும் விடுத்து வருகிறபோது, கூடுதல் நிதி ஒதுக்கப் படாதது கிராமப்புறங்களில் கடுமையான வறுமையை அதிகப்படுத்தும்.

அதேபோல், கடந்தாண்டு விவசா யத்துக்கு ஒதுக்கிய உர மானியம் ரூ. 3600 கோடி, பெட்ரோலியப் பொருள்களுக்கான மானியம் ரூ. 2200 கோடி ஆகியவை வெட்டப்பட்டுள்ளன. இது விவசாயத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இந்தி யாவில் பல மாநிலங்களில் டீசல் இன்ஜினை பயன்படுத்தி விவசாயம் நடைபெற்று வரு கிறது. இதனால், பெட்ரோல், டீசல் பொருள் கள் விலை உயர்ந்து விவசாயத்தில் பெரு மளவு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்படவில்லை. 90 சதவிகித மக்களுக்கு எதிரான பட்ஜெட் மொத்தத்தில் ஏழைகளுக்கு எதிராகவும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான நிதிநிலை அறிக்கையாக உள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையால் விலைவாசி உயரும், வேலையின்மை அதிகரிக்கும், இந்தியாவில் உள்ள 90 சதவீத மக்களை பாதிக்கக்கூடிய நிதி நிலை அறிக்கையாக உள்ளது ஆகவே இந்த பாரபட்சத்தை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் பட்ஜெட் கண்டன ஆர்ப்பாட்டம் கட்சியின் சார்பாக மாநிலம் முழுவதும் நடைபெறும்” என்று பெ. சண்முகம் தெரிவித்தார்.

பீகார் மாநிலத்திற்காக ஒன்றிய அரசு தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கையே – வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மத்திய அரசின் பட்ஜெட் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டிலிருந்து வரி என்ற பெயரில் பல இலட்சம் கோடிகளை சுரண்டிச் செல்லும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு சிறப்புத் திட்டம் எதையும் அறிவிக்காதது கண்டனத்துக்குரியது!

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-–2026ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இன்று (01.02.2025) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், சுமார் 26 கோடி விவசாயத் தொழிலாளர்கள் உள்ள நிலையில், அத்திட்டம் குறித்து எவ்வித அறிவிப்பும் இன்றி ஒன்றிய அரசு கடந்து சென்றுள்ளது.

அதவாது, 2024-–2025ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு, ரூ.86 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கோடிக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பும், ஊதியமும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், 2025–2026ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கான நிதியை அதிகரிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களும் கோரிக்கை விடுத்த நிலையில், அதுகுறித்த எவ்வித அறிவிப்பும் இல்லை என்பது 26 கோடி விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இதன் மூலம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முற்றிலும் ஒழித்துக் கட்டவே ஒன்றிய அரசு முடிவு செய்திருக்கிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை கருத்தில் கொண்டால், பெட்ரோல், டீசல் விலையை கணிசமாக குறைக்க முடியும் என்ற பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனையை, நிதிநிலை அறிக்கையில் கருத்தில் கொள்ளவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

உயர்நீதிமன்றங்களில் 61 லட்சம் வழக்குகளும், விசாரணை நீதிமன்றங்களில் 4.62 கோடி வழக்குகளும் நிலுவையில் இருக்கும் நிலையில், உயர்நீதிமன்றங்களில் 1,114 நீதிபதி பணியிடங்களில் 332 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை.

இந்திய ஒன்றியத்திற்கு காலநிலை மாற்றம் பெரும் சவாலாக விளங்கி வரும் நிலையில், அச்சவாலை எதிர்க்கொள்வதற்கோ, சுற்றுச்சூழலின் பாதுகாப்பு கருதி, நாசக்கார திட்டங்களை ஒழித்துக் கட்டுவதற்கோ எந்த அறிவிப்பும் இல்லை.

ஒட்டுமொத்த நாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி, காப்பீட்டு துறையில் நூறு சதவீதம் அந்நிய முதலீடு செய்ய அனுமதிப்பது சாதாரண மக்கள் சேமிப்பை பாதிக்கும்.

குறிப்பாக, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம், இரட்டை வழி ரயில்பாதை திட்டம், ரயில் பாதை மின் மயமாக்கல் போன்ற தமிழ்நாட்டின் திட்டங்களுக்கும், இயற்கை பேரிடர் கால நிவாரணம் மற்றும் மறு வாழ்வு, புனரமைப்பு போன்ற இன்றியமையாத் தேவைகளுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

தமிழ்நாட்டில் வரி என்ற பெயரில் பல இலட்சம் கோடிகளை கொள்ளை அடித்துச் செல்லும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டின் விவசாயிகளுக்கும், வளர்ச்சித்திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கவில்லை என்பது கண்டனக்குரியது.

அதானி, அம்பானி போன்ற பன்னாட்டு முதலாளிகளுக்கு வழக்கம் போல் ஆதரவுக் கரம் நீட்டியுள்ள ஒன்றிய அரசு, தமிழ்நாட்டின் வளர்ச்சியை கவனத்தில் கொள்ளாதது ஓரவஞ்சனையே!

முக்கியமாக, பீகார் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, அம்மாநிலத்திற்கு மட்டும் பல வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இது ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை என்று கூறுவதை விட, பீகார் மாநிலத்திற்காக ஒன்றிய அரசு தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கையே எனக் கூறுவது பொருத்தமாக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம் – விஜய்

த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “2025-26ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள், இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க அம்சங்கள் ஒரு சில மட்டுமே இடம்பெற்றுள்ளன. ஆண்டிற்கு 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி விலக்கு அளித்திருப்பதை நான் உளமார வரவேற்கிறேன். இதன் மூலம் நடுத்தர மக்களுக்குக் குறிப்பிடும்படியான நிவாரணம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே சமயம் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய பெட்ரோல் / டீசல் வரிக் குறைப்பு மற்றும் GST வரிக் குறைப்பு / எளிமைப்படுத்துதல் பற்றி எந்த ஓர் அறிவிப்பும் இல்லாதது மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.

முதல்முறையாகத் தொழில்முனைவோராக உருவாகும் பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உள்ளடங்கிய முதல் 5 லட்சம் பேர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ரூ.2 கோடி வரை கடன் வழங்கப் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்திருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் உளமார வரவேற்கிறது.

அதே சமயம் விலைவாசியைக் கட்டுப்படுத்தவும், வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் போதிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

குறிப்பாக, சிறு குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வாயிலாக இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையிலான திட்டங்கள் ஏதும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.

புதிய ரயில் தடங்கள், சாலைகள், கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் போன்ற தமிழ்நாட்டுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு எந்த ஓர் அறிவிப்பும் இடம்பெறவில்லை.

தமிழகத்தில் மிகத் தொன்மையான இரும்பு நாகரிகம் இருந்தது அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கின்ற கண்டுபிடிப்பாகும். இதற்கு உரிய அங்கீகாரமும் சுற்றியுள்ள பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள நிதியும் வழங்காதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

அணுஉலை மின் உற்பத்தி PPP (Public Private Partnership) மூலம் தனியார் மயமாக்கப்படுதலுக்கு இந்த நிதிநிலை அறிக்கை முக்கியத்துவம் வழங்கி இருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்திக்கான தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்தக் காலக்கட்டத்தில் மீண்டும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும் அணுமின் உற்பத்தி தொடர்பான அறிவிப்பை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

Asset Monetization வாயிலாகப் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகள், ஒரு சில பெரும் தனியார் நிறுவனங்களின் கைகளுக்குச் சென்று விடுமோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஒவ்வோர் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போதும், சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களைக் கருத்தில் கொண்டு, அந்த மாநிலத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அதிக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவது மற்ற மாநிலங்களையும் அந்த மாநில மக்களையும் அவமதிப்பதாக உள்ளது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகும்.

வழக்கம் போல் இந்த ஆண்டும் ஒன்றிய அரசானது தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் புறக்கணித்துள்ளது.

அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே ஒன்றிய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். மாறாக, பாரபட்சத்தோடு நடந்துகொள்வது சரியான அணுகுமுறை இல்லை” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *