அஞ்சலி – அடித்தட்டு மக்களுக்காய் களம் கண்ட காவலர் டாக்டர் ஏ.மாரிமுத்து
(தோற்றம் : 15-03-1970 மறைவு : 12-12-2024 )
டாக்டர் ஏ.மாரிமுத்து செங்கல்பட்டு மாவட்டம் ‘கல்குளம்’ கிராமத்தில் பிறந்தவர். இவர் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞர் அண்ணா அரசுக் கலைக்கல்லூரியில் வரலாற்றுத்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். தற்பொழுது குடவாசல், டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வந்தார். தமிழோடு மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் புலமைமிக்கப் பேராசிரியரான முனைவர் ஏ.மாரிமுத்து திருவள்ளுவர் பல்கலைக்கழகக் கல்விக்குழு உறுப்பினராகவும், அரசு ஊழியர் அய்க்கியப் பேரவையின் மாநிலத் துணைத்தலைவராகவும் பல்வேறு ஆய்வு சார்ந்த அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அளவில் அனைத்து அரசு கல்லூரி பேராசிரியருக்கான எஸ்.சி/எஸ்.டி சங்கத்தை உருவாக்கிய இவர், கலை-இலக்கியம், வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், அரசியல் என்னும் பல்வேறு தளங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இயங்கியுள்ளார். சிறந்த எழுத்தாளராக இவர் சமணம், பெளத்தம், சமூகம், இலக்கியம், வரலாற்று என்னும் பல்வேறு தளங்கில் செயல்பட்டுள்ளார்.
இவர் தன் வாழ்வியல் அனுபவங்களை அடிப்படையாக கொண்டு நாட்டுப்புறப் பாடல்கள், சிறுகதைகள் (கிச்சிலிப் பயமாட்டம் பொண்ணு) நாடகங்கள் என தலித்திய அழகியலாக பல்வேறு படைப்புகளை எழுதியுள்ளார். சமீபத்தில் இவர் எழுதி வெளியிட்ட ‘வந்தவாசி போரும் வரலாறும்’ என்னும் நூல் வந்தவாசியை மையமாகக் கொண்டு நடைபெற்ற போருக்கான சூழலைப் பேசும் முக்கிய வரலாற்று ஆவணமாகும். இத்தனை ஆண்டுகளில் இவர் கல்லூரி மாணவர்கள் பலரையும் பல்வேறு துறை சார்ந்த பணிச் சூழலுக்கு உயர்த்தியும், கருத்தியலாக மாணவ சமூகத்தை உருவாக்கப் போராடியும் வந்த இவரது மறைவு பலராலும் நினைவு கூரத்தக்கது.

நல்லார் நல்லார் வாழ்வியல்
நம்மில் ஓங்குக
ஆம். நினைவாய் ஏந்தி நல்லதை நாடுகிறோம் ஐயா