மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபகாலமாக லாரி டிரைவர், செருப்பு தைக்கும் தொழிலாளி, ரெயில்வேயில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்தரப்பட்ட தொழில் சார்ந்தவர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.
சமீபத்தில் அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளையும், மருத்துவமனையைச் சுற்றியுள்ள சாலைகளிலும் சுரங்கப் பாதைகளிலும் இருக்கும் நோயாளிகளின் குடும்பத்தினரையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அத்தகவலை அவர்,
“இன்று நான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெளியே சிகிச்சைக்காக வந்த நோயாளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்தேன். அவர்கள் சாலைகள், நடைபாதைகள் மற்றும சுரங்கப்பாதைகளில் தூங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குளிர்ந்த நிலம், பசி மற்றும் சிரமங்களுக்கு மத்தியில் நம்பிக்கையின் சுடரை எரித்துக்கொண்டே இருக்கிறார்கள். மத்திய அரசும், டெல்லி அரசும் பொதுமக்களுக்கான பொறுப்பை நிறைவேற்றுவதில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளன என காட்டமாக தெரிவித்துள்ளார்”
