April 29, 2026
images
Share

காஞ்சிபுரம் மக்களுக்கு ஒர் இனிய செய்தி !

காஞ்சிபுரம், பொன்னேரிக்கரையில் 14 ஏக்கரில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடப்பதாக ஆட்சியர் கலைச்செல்வி மோகன்  தெரிவித்துள்ளார்.

பட்டு நகரம் காஞ்சிபுரத்தில், 4 ஏக்கர் பரப்பளவில் இயங்கும் பேருந்து நிலையம் போதிய இடவசதி இல்லாததால், புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல  ஆண்டுகளாக உள்ளது. சென்னையிலிருந்து, வேலுார் மார்க்கமாக செல்லும் பெங்களூரு, தர்மபுரி, ஓசூர் போன்ற பகுதிகளுக்கு போதிய பேருந்துகள் காஞ்சிபுரத்தில் இல்லாததால், புறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையம் அமைக்க, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டது. கீழ்கதிர்பூர், வெள்ளைகேட் உள்ளிட்ட இடங்களில் பேருந்து நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இட பிரச்னையால் பேருந்து நிலையம் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. பிறகு தி.மு.க., ஆட்சி அமைந்ததும், புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு,38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது. ஆனால், இட தேர்வு பிரச்னை, இரு ஆண்டுகளாக நீடித்தது.

தற்போது, தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடம், பொன்னேரிக்கரை பகுதியில், அண்ணாதுரை நினைவு துாண் அருகே உள்ளது. அந்த இடத்தில், 14 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருப்பதால், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் கார்த்திகேயன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்துள்ளனர். அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில், பேருந்து நிலையத்துக்கு தேவையான இடத்தை கையகப்படுத்த, வருவாய் துறை சார்பில், ‘நோட்டீஸ்’ கொடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வருவாய் துறையின் நோட்டீசுக்கு, அறக்கட்டளை நிர்வாகம் பதில் அனுப்புவார்கள் என, மாவட்ட நிர்வாகம் காத்திருக்கிறது.

இதை பற்றி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் கூறியது :

பல ஆண்டுகளுக்கு முன், அறக்கட்டளைக்கு அரசு வழங்கிய இடத்தை அவர்கள் பயன்படுத்தாமல் உள்ளனர். எனவே, பேருந்து நிலையத்துக்கு பயன்படுத்த அவர்களிடம் கேட்டுள்ளோம். அதற்கான நோட்டீசும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அறக்கட்டளை பதில் கொடுத்தவுடன், நில நிர்வாக கமிஷனர் அலுவலகத்திற்கு கோப்புகள் அனுப்பி, ஒப்புதல் பெறப்படும். ஏற்கனவே, பேருந்து நிலையத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால், விரைவில் பேருந்து நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

என்று அவர் கூறினார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *