சட்டவிரோத குடியேற்ற விவகாரம் தொடர்பாக மோடியுடன் விவாதித்து வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி மாதம் அமெரிக்கா வர வாய்ப்புள்ளது என தெரிவித்த அவர், ‘இந்தியாவுடன் தங்களுக்கு நல்ல உறவு உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து ஆண்ட்ரூஸுக்குத் திரும்பும் வழியில் டொனால்டு ட்ரம்ப் நேற்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “இன்று (திங்கட்கிழமை) காலை பிரதமர் மோடியுடன் நீண்ட நேரம் பேசினேன். அவர் அடுத்த மாதம், அநேகமாக பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருவார்.
இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது.” என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக குடியேறி இருப்பவர்களை அழைத்துச் செல்ல மோடி ஒப்புக்கொண்டாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ட்ரம்ப், “அவர் (மோடி) சரியானதைச் செய்வார். நாங்கள் விவாதித்து வருகிறோம்.” என்று கூறினார்.
பிரதமர் மோடி உடனான தொலைபேசி உரையாடலின் விவரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “(மோடியுடனான தொலைபேசி உரையாடலில்) அனைத்தும் வந்தது” என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, ட்ரம்ப் – மோடி தொலைபேசி உரையாடல் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரு பயனுள்ள தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். இரு தலைவர்களும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது மற்றும் ஆழப்படுத்துவது குறித்து விவாதித்தனர். இந்தோ-பசிபிக், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவின் பாதுகாப்பு உட்பட பல்வேறு பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
இந்தியா, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தையும், நியாயமான இருதரப்பு வர்த்தக உறவை நோக்கி நகர்வதன் முக்கியத்துவத்தையும் அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தினார். பிரதமர் மோடி வெள்ளை மாளிகைக்கு வருகை தருவதற்கான திட்டங்கள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர். இது நமது நாடுகளுக்கு இடையிலான நட்பு மற்றும் உறவுகளின் வலிமையை உணர்த்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
