June 23, 2026
Trichy - Vayalur - Murugan Temple

Kudamuzhakku

Share

திருச்சி வயலூர் முருகன் கோயிலில் நாளை (பிப்ரவரி. 19) நடைபெற இருக்கும் குடமுழக்கு விழாவில் பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்கள் பிரபு, ஜெயபாலன் பங்கேற்க தடை! நான்கு ஆண்டாய் நீடிக்கும் இக்கருவறைத் தீண்டாமைக்கு அமைச்சர் சேகர்பாபு ஆதரவா?

முதல்வர் இப்பிரச்சனையில் உடனே தலையிட வேண்டுமென தமிழ்நாடு, பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தினரும், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமூகத்தின் மிக முக்கிய அதிகார மையமான கோயில் கருவறையில் 2000 ஆண்டுகளாக நிலவி வந்த கருவறைத் தீண்டாமையை அகற்ற, தன் வாழ்நாள் முழுவதும் போராடினார் தந்தை பெரியார். அவரைத் தொடர்ந்து ‘தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் கருவறை தீண்டாமை’ என்று முழங்கி தி.மு.க.தலைவர் கலைஞர் போராடினார். ஆனால் அம்முள்ளை அகற்றும் போராட்டம் இன்றளவும் நீடிக்கிறது.

2021-ல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 24 அனைத்து சாதி அர்ச்சக மாணவர்களை கோயில் அர்ச்சகர்களாக நியமனம் செய்தார். கருவறைத் தீண்டாமையை அகற்ற எடுத்த இம்முயற்சி வரலாறு சிறப்புமிக்கது.

அவ்வாறு நியமிக்கப்பட்ட அர்ச்சகர்களுக்கு ஏராளமான நெருக்கடிகளை ஆர்.எஸ்.எஸ்-பார்ப்பனிய சக்திகள் தொடர்ந்து கொடுத்தாலும், அதையும் தாண்டி சிறப்பான முறையில் கோயில்களில் பூஜை செய்து குடமுழுக்கு நடத்தி மக்கள் மத்தியில் முறையான அங்கீகாரத்தை பார்ப்பனரல்லாத 24 அர்ச்சகர்களும் இன்றுவரை பெற்றுள்ளனர்.

அனைத்து சாதி இந்துக்களும் அர்ச்சகர் ஆவதை, தொடர்ச்சியாக எதிர்த்து வரும் பார்ப்பனர்கள், ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, இந்து முன்னணியினர் தொடர்ந்து அர்ச்சகர் நியமனத்துக்கு எதிரான பல்வேறு முட்டுக்கட்டைகளை உருவாக்கி, உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்து தற்போது தமிழகத்தில் உள்ள கோயில்களில் அர்ச்சகர் நியமனம் செய்ய உச்சநீதிமன்றத்தில் தடைபெற்றுள்ளனர்.

குறிப்பாக திருச்சி வயலூர் முருகன் கோயிலில் தமிழக முதல்வரால் நியமிக்கப்பட்ட பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்கள் பிரபு, ஜெயபாலன் ஆகியோர் நியமனத்தை எதிர்த்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இச்சூழலில் நாளை பிப்ரவரி.19 அன்று வயலூர் முருகன் கோயில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. குடமுழுக்கு நிகழ்வில், தமிழக அரசின் அர்ச்சகர்களை, பரம்பரை அர்ச்சகர்கள் என்று சொல்லும் சிவாச்சாரியாரகள் ஒதுக்கி வைத்துள்ளனர்.

இதில் ஆத்தங்குடி ரவி அய்யர், சம்பந்தம், பாபு, மணிகண்ட குருக்கள் உள்ளிட்ட 80 பார்ப்பன சிவாச்சாரியார்களை அழைத்து குடமுழுக்கு நடத்தும் இந்து சமய அறநிலையத் துறையும் & சிவாச்சாரியார்களும் பார்ப்பனர் அல்லாத தமிழர்களை புறக்கணிப்பது ஏன்?

பார்ப்பனர் அல்லாத அர்ச்சர்கர்களை கடந்த 4 ஆண்டுகளாக கருவறைக்குள் அனுமதிக்காதது ஏன்? இதற்கு பெயர் தீண்டாமை தானே..

இதற்கிடையில் தங்களுக்கு இழைக்கப்படும் தீண்டாமைக் கொடுமை குறித்து அரசு அர்ச்சகர்கள் பிரபு, ஜெயபாலன் ஆகியோர் தமிழக முதல்வருக்கு புகார் அளித்துள்ளனர். ஆனாலும், அறநிலையத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பரம்பரை வழி அர்ச்சகர் முறை 1972-ல் ஒழிக்கப்பட்டாலும், இன்றுவரை மதுரை மீனாட்சியம்மன், திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம் முருகன் கோயில்கள், திருவரங்கம் அரங்கநாதர், சென்னை கபாலீசுவரர் கோயில்களில் தமிழ்ச் சமுதாயத்தின் தேவர், கவுண்டர், யாதவர், வன்னியர், செட்டியார், பிள்ளை, ஆதிதிராவிடர் உள்ளிட்டோர் கோயில் கருவறையில் நுழைய முடியவில்லை என்பது கடும் வேதனைக்குரியது.

அரசியல் சட்டத்தின் ஆட்சி என்பதற்கான சவால் இது. எனவே தந்தை பெரியார் மண்ணில் சமத்துவ, சமூகநீதி தமிழக முதல்வர் அவர்கள் தமிழ் மக்கள் உழைப்பில் உருவாக்கப்பட்ட கோயில்களில் தமிழையும் தமிழர்களையும் நிலைபெறச் செய்ய வேண்டும்.

தமிழக முதல்வரின் நேரடி தலையீடு இல்லாமல் அர்ச்சகர் மாணவர் திட்டம் – ஆலயங்களில் சமத்துவம் நிறைவேற வாய்ப்பு இல்லை. எனவே தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்து, பிப்ரவரி.19 அன்று திருச்சி வயலூர் முருகன் கோயிலில் நடைபெறும் குடமுழுக்கில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள் பிரபு, ஜெயபால் ஆகியோரை பங்கேற்கச் செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், முற்போக்கு இயக்கங்கள், ஆன்மீக அமைப்புகள் என அனைவரும் ஒன்று சேர்ந்து அரசு அர்ச்சகர்களுக்கு ஆதரவாக துணை நிற்க வேண்டும் தமிழ்நாடு, என அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா.ரங்கநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *