மேல்மா பெண் விவசாயிகளை நள்ளிரவில் செங்கல்பட்டு பகுதியில் கொட்டும் மழையில் இறக்கி விட்ட காவல்துறையினருக்கு கண்டனம் தெரிவித்துள்ள பி.ஆர். பாண்டியன், காவல்துறை மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக விவசாயிகள் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “திருவண்ணாமலை மாவட்டம், மேல்மா சிப்காட்டிற்கு எதிராக ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். அவர்கள் மீது சட்ட விரோதமாக குண்டர் சட்டப்படி வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர். இதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்தது. உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு பிறகு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு சிதிரவதைகளுக்கெதிராக மனம் தளராமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்நிலையில் நேற்று 19.12.2024 ல் அம்மாவட்டத்தை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களை அவரது சென்னை இல்லத்தில் நேரில் சந்தித்து முறையிடுவதற்க்காக பெண் விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர். சென்னை மாநகர காவல்துறை இரவு 8 மணி வரை அலைகழித்து விட்டு அமைச்சர் வீட்டருகே காத்திருந்த பெண் விவசாயிகளை வலுகட்டாயப்படுத்தி பேருந்துகளில் ஏற்றி கிலாம்பாக்கம் பேருந்துலேயே 2 மணி நேரத்திற்கு மேலாக அடைத்து வைத்து கழிவறைக்கு செல்ல அனுமதிக்காமல் கொடுமைபடுத்தி உள்ளனர்.
பிறகு நள்ளிரவு 2 மணியளவில் கொட்டும் மழையில் செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் இறக்கி விட்டுள்ளனர். இவர்களில் பலர் இன்னும் ஊர்களுக்கு திரும்பவில்லை என தெரிவிக்கின்றனர். காணாமல் போனவர்களின் கைப்பேசிகள் அனைக்கப்பட்டுள்ளதாக கூறி குடும்பத்தினர் அச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அமைச்சர் வீட்டில் இல்லை என்றால் உரிய அதிகாரிகள் அவர்களை அழைத்து கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கலாம். அதை விடுத்து நள்ளிரவு வரை காக்க வைத்து கொடுமை செய்து
நடுவழியில் இறக்கி விட்ட காவல்துறையினர் மீது தமிழ்நாடு முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
காணாமல் போனதாக கூறப்படும் பெண் விவசாயிகளை உடனடியாக அவர்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பதற்கான உரிய அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
