காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 03 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும், தமிழகத்தின் முதலாவது முதலமைச்சருமாவார். இவர் அறிஞர் அண்ணா எனவும் பேரறிஞர் அண்ணா எனவும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.
அண்ணாதுரை முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் புற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது 3 பெப்ரவரி, 1969 அன்று மரணமடைந்தார். அவர் புகையிலையை உட்கொள்ளும் பழக்கமுடையவராததால் (புகையிலைப் பொடி நுகரும் பழக்கம்) இந்நோய் தீவிரமடைந்து மரணமடைந்தார். அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில். இடம் பெற்றுள்ளது. இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர் கலந்துக் கொண்டு இறுதி மரியாதைச் செலுத்தினர். இவரின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் நினைவை போற்றும் வகையில் இவ்விடம் அண்ணா சதுக்கம் என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
