June 23, 2026
double suffrage jaganathan

எழுத்தாளர் அ. ஜெகநாதன் - இரட்டை வாக்குரிமை நூலின் ஆசிரியர்

Share

எழுத்தாளர் அ. ஜெகநாதன்

இரட்டை வாக்குரிமை எனும் அரசியல்கோட்பாடு தனித்தொகுதி என்பதின் வளர்நிலைக் கோட்பாடாகும். தனித்தொகுதி எனும் கருத்தியல் தென்னிந்திய தலித் அரசியல் நவீன இந்திய அரசியல் வரலாற்றுக்கு வழங்கிய கொடையாகும். அயோத்திதாசர் பங்காற்றிய திராவிட மகாசனசபா 1891 ம் ஆண்டு தலித் மக்களுக்கு பஞ்சாயத்து, நகராட்சி மன்றங்களில் தனிநியமனம் வேண்டும் என்றது. காலனிய அரசு இந்தியாவில் நவீன அரசில் வடிவத்தை அறிமுகப்படுத்திய தருணத்தில் அதனை தனதாக்கும் தலித் அரசியலின் தொடக்கநிலையை நாம் அவதானிக்கலாம். தனிப்பிரதிநிதித்துவம் என்பது காலவோட்டத்தில் தனித்தொகுதி என்பதாகவளர்த்தெடுக்கப்பட்டது. தனிப்பிரதிநிதித்துவம் – தனித்தொகுதி என்பதான வளர்நிலை அரசியல் கோட்பாட்டிற்கு அயோத்திதாசர்- எம்.சி.ராஜா முதலான தென்னிந்திய அரசில் செயல்பாட்டாளர்களே காரணகர்த்தாக்களாவர்.

தனித்தொகுதி என்ற அரசியல் கோட்பாடு இப்போது சிறுபான்மை சமூகத்தவரின் அரசியல் கோட்பாடாக உருமாறியது. இசுலாமியர்கள், சீக்கயர்கள், இந்தியக் கிறித்தவர்கள் என்பதான மதச்சிறுபான்மைச் சமூகத்தவர் தனித்தொகுதி கோட்பாட்டை தங்களுக்கானதாகவும் மாற்ற முயன்றனர். எனவே அரசியல் களம் தனித்தொகுதி கோட்பாட்டால் உந்தப்பட்டு வினையாற்றியது. இச்சூழலில் காலனிய அரசு நவீன அரசியல் வடிவத்திற்குள் இந்தியர்களை உட்புகுத்தும் நோக்கில் வட்டமேசை மாநாடுகளைக் கூட்டியது.அம்பேத்கர் இம்மாநாட்டில் கலந்துகொண்டார். தனித்தொகுதி கோட்பாட்டிற்குள் மெல்ல நுழைந்தார். அம்பேத்கர் தனித்தொகுதி என்ற கோட்பாட்டின் வாயிலாக தலித்துகளை தனித்த அலகாக வடிவமைக்க முற்பட்டார்.

சாதிப்பெரும்பான்மைக்கு எதிராக தலித்துகளை சாதிச் சிறுபான்மையாக மாற்றி ஏற்கனவே இங்கு உருவாகியிருந்த மதச்சிறுபான்மை என்ற தொகுதியோடு இணைக்க முற்பட்டார். மதச்சிறுபான்மைக்கு எதிரான இந்துப் பெரும்பான்மை ஒன்றை அப்போது இந்து மகாசபா உருவாக்கி வந்தது. இப்போது தனித்தொகுதி வாயிலாக இந்துப்பெரும்பான்மையிலிருந்து தலித்துகள் முறித்துக்கொண்டு மதச்சிறுபான்மையினரோடு தங்களை இணைத்துக்கொள்ள முயன்றனர். அம்பேத்கர் அதனை சட்டரீதியக வகைப்படுத்த வட்டமேசை மாநாட்டை பயன்படுத்திக்கொண்டார். தனித்தொகுதி என்ற கோட்பாட்டு வாயிலாக ஏனைய சிறுபான்மையினரோடு தலித்துகளையும் இணைத்து அதற்கான சட்டப் பாதுகாப்பு ஒப்பந்தங்களையும் உருவாக்கிவைத்திருந்தார்.

தலித்துகளுக்கானத் தனித்தொகுதி என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட காலனிய அரசு அவர்களுக்கு இரட்டைவாக்குரிமை என்ற அதிசிறந்த அரசியல் கோட்பாட்டை வழங்கியது. தனித்து தங்களது அரசியல் உரிமையை பாதுகாப்பதோடு பொது அரசியலோடு தங்களது அரசியலை பிணைத்துக்கொள்வது. பொது அரசியலில் கலந்தாலும் தலித்துகள் தங்களது தனித்துவத்தை தக்கவைத்துக்கொள்ளலாம். ஏறக்குறைய இந்த ஆளுமையை நாம் அம்பேத்கரிடம் காணலாம். ஒரு அரசியல் கோட்பாடு ஆளுமையை வளர்க்கும் என்பதற்கு இரட்டை வாக்குரிமை கோட்பாடு சரியானதொரு உதாரணம்.

காந்தி இரட்டை வாக்குரிமையில் உள்ள அரசியல் பண்பைக்காட்டிலும் அதன் பண்பாட்டுக்கருத்தியலை சடுதியில் புரிந்துகொண்டார். தனித்தொகுதி வாயிலாக இந்துப்பெரும்பான்மை உடையும் என்பதை தனது நுண்ணுணர்வால் உணர்ந்தார் காந்தி. தலித்துகளுக்கான தனித்தொகுதிமுறை இந்துமதத்திற்கு எதிரானதென்றார். தனித்தொகுதி என்ற அரசியல் கோட்பாடு இந்துமதத்திற்கு எதிரானத் தாக்குதல் என்றும் கூறினார். அதனாலேயே அதனை முறியடிக்க காந்தி சாம,தான,பேத வழிமுறைகளை வட்டமேசை மாநாட்டு சமயங்களில் மேற்கொண்டார்.

அரசியல் கோட்பாட்டை பண்பாட்டுச்சிக்கலாக காந்தி வகைப்படுத்தினார். பண்பாட்டுப் பரப்பில் இந்து மத ஓர்மையை வளர்த்து வந்த இந்துமகாசபா இப்போது காந்தி அரசியலோடு இணைந்து கொண்டது. இந்துமகாசபா ஏற்கனவே இந்துப்பெரும்பான்மை என்ற உருவகத்தை அரசியலரங்கில் உருவாக்கி வந்தது. மதச்சிறுபான்மையினரை அச்சுருத்தும் பிரிவினர் என்று பேசிவந்தது. மதச்சிறுபான்மையினருடன் தனித்தொகுதிவாயிலாக தலித்துகள் கூட்டணி அமைத்தால் இந்துப் பெரும்பான்மை சீட்டுக்கட்டைப் போன்று சரிந்துவிடும் என்று அது நம்பியது. இந்துப்பெரும்பான்மைச் சிதைவை தடுக்கும் நோக்கில் காந்தியுடன் இந்துமகாசாபா இந்நேரத்தில் கைகோர்த்தது. இந்துப்பெரும்பான்மை யை பாதுகாக்கும் நோக்கில் காந்தி உண்ணாவிரதம் இருந்தார். இரட்டை வாக்குரிமை இல்லாதொழித்தார்.இரட்டை வாக்குரிமை வீழ்த்திய நிலத்திலிருந்து இந்துப்பெரும்பான்மையை சிதையாவண்ணம் காந்தி பார்த்துக்கொண்டார்.

“இரட்டை வாக்குரிமை” என்ற நூல் இவை அனைத்தையும் பேசுகிறது.தலித்துகள் அரசியலில் மட்டுமின்றி பண்பாட்டுக் களத்திலும் தனித்தானவர்கள்தான் என்பதை இந்நூல் முன்வைக்கிறது. தமிழ்ப்பரப்பில் அம்பேத்கருக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தலித் மக்கள் செயல்பட்டதை இந்நூல் தரவுகள் வாயிலாக நிறுவியுள்ளது.

இந்திய அளவில் இன்று மதப்பெரும்பான்மை பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்துள்ளது. அதற்கு இணையாக சாதிப்பெரும்பான்மையும் தமிழகம் தொடங்கி இந்தியாவெங்கும் வளர்ந்துள்ளது. என்ற புரிதலை இந்நூல் நமக்கு கொடுக்கும்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *