April 29, 2026
UGC

Chief Minister - Condemnation

Share

ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) விதிகளில் தன்னிச்சையாக திருத்தம் செய்துள்ளது. இது அரசியலமைப்புக்கு எதிரானதென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்.

புதிய விதிமுறைகள் குறித்த விவகாரத்தில் தமிழ்நாடு அமைதியாக இருக்காது. சட்டப்படி போராடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு தற்பொழுது நிதி நெறுக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 21 பக்கங்களில் UGC 2025ஆம் ஆண்டிற்கான வரைவு அறிக்கையை தயாரித்துள்ளது. இந்த அறிக்கையில், பல்கலைகழக மானியக்குழு வகுத்திருக்க கூடிய விதிமுறைகளை கண்டிப்பாக அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைகழகங்கள், கல்லூரிகள் ஏற்கவேண்டும். விதிமுறைகளை ஏற்காத கல்வி நிறுவனங்கள் UGC திட்டங்களில் இருந்து நீக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை ஏற்காத கல்வி நிறுவனங்ககளில் வழங்கப்படும் பட்டங்கள் செல்லாததாகிவிடும் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என யு.ஜி.சி புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆளுநர் பரிந்துரைப்பவரே தலைவராகவும், யு.ஜி.சி பரிந்துரைப்பவர் உறுப்பினராகவும் இருப்பார்கள், பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவரே மற்றொரு உறுப்பினராக இருப்பார். புதிய விதிமுறையால் மாநில அரசு பரிந்துரைக்கும் உறுப்பினர் இனி இடம்பெற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதாக எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

‘பல்கலைக்கழக வேந்தர் நியமனத்தில் ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்குவது மற்றும் கல்வியாளர்கள் அல்லாதவர்கள் இந்தப் பதவிகளை வகிக்க அனுமதிப்பது உள்ளிட்ட புதிய யு.ஜி.சி விதிமுறைகள், கூட்டாட்சி மற்றும் மாநில உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும்.

மத்திய பா.ஜ.க அரசின் இந்த எதேச்சதிகார நடவடிக்கை, அதிகாரத்தை மையப்படுத்தவும், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் மதிப்பைக் குறைக்கவும் முற்படுகிறது. பா.ஜ.க அரசின் கட்டளைப்படி செயல்படும் ஆளுநர்களிடம் இல்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கைகளில் கல்வி இருக்க வேண்டும்.
உயர்தர கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையில் நாட்டில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கும் நிலையில், இங்குள்ள நிறுவனங்களின் சுயாட்சி பறிக்கப்படும்போது அமைதியாக இருக்காது.

கல்வி என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தில் ஒருங்கிணைந்த பட்டியலின் கீழ் உள்ள ஒரு பாடமாகும். எனவே, யு.ஜி.சி இந்த அறிவிப்பை ஒருதலைப்பட்சமாக வெளியிடுவது அரசியலமைப்புக்கு எதிரானது. இந்த அத்துமீறலை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் தமிழகம் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் போராடும்’ என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *