April 30, 2026
Tamil-Nadu-assembly
Share

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் நாளை ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது. 

தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் நாளை (ஜன.6 திங்கள் கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். நேற்று முன்தினம் ராஜ்பவனுக்கு, பேரவைத் தலைவர் மு.அப்பாவு மற்றும் பேரவை செயலர் கி.சீனிவாசன் ஆகியோர் சென்று ஆளுநர் ரவியை சந்தித்து உரையாற்ற வரும்படி முறைப்படி அழைப்பு விடுத்தனர்.

கடந்த 2023 – 24-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆண்டு முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றும்போது, அரசு தயாரித்து அளித்த உரையில் இடம்பெற்றிருந்த கருத்துகளை விடுத்தும் சிலவற்றை சேர்த்தும் வாசித்ததால் சர்ச்சை எழுந்தது. அதன்பின், சட்டப்பேரவை குறிப்பில் அரசு தயாரித்து அளித்த உரை மட்டுமே இடம்பெறும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு முதல் கூட்டத்துக்கான ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.ஆளுநர் உரை நிகழ்த்தி முடித்ததும், அதன் தமிழாக்கத்தை பேரவைத்தலைவர் வாசிப்பார். அத்துடன் அன்றைய நிகழ்ச்சிகள் முடிவுபெறும். அன்றே, அலுவல் ஆய்வுக்குழு கூடி, ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவெடுக்கும்.

இந்த கூட்டத்தொடரில் பல்வேறு சட்ட முன்வடிவுகள் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் 2019-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த 95 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், வார்டு மறுவரையறை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் ஊரக உள்ளாட்சிகளை சேர்க்கும் பணிகள் முடிந்த பிறகு நடைபெறும் என அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது. எனவே, அதுவரை ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர்களை நியமிக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளது. இந்த அவசர சட்டத்துக்கு வரும் பேரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என கூறப்படுகிறது.

 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *